மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசடிக் கும்பலொன்று பொதுமக்களிடம் பணத்தை சூறையாடி வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மோசடிக் கும்பலானது மணமகள் தேவை, வேலைவாய்ப்பு, அதிஷ்டலாப சீட்டிழுப்பு போன்ற பல விடயங்களை பொதுமக்களிடம் தொலைபேசி மூலமாக பேசி பணத்தை மோசடி செய்து வருகின்றது. குறித்த கும்பல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு மட்டக்களப்பு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு பிரதேசத்தினைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவருக்கு மணமகள் தேவையென பல பொய் வாக்குறுதிகளை தெரிவித்து மணமகளின் பெற்றோரை நம்ப வைத்து பல இலட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வங்கி வேலைவாய்ப்பிற்கான நேர்முக பரீட்சை நடைபெற உள்ளதாகவும், சான்றிதழ்களுடன் வங்கிக்கு வருமாறும் பயிற்சியின் போது வழங்கப்படும் பெறுமதியான பொருட்களுக்காக செலுத்த வேண்டிய தொகையான 10 ரூபாய் ஆயிரம் முதல் 01 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை ஈஸி கேஷ்(Easy Cash) மூலம் அனுப்புமாறு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பண மோசடி செய்துள்ளனர். தங்களுக்கு சொல்லப்பட்ட திகதியில் நேர்முக பரீட்சைக்காக வங்கிக்கு சென்ற பின்னரே பலர் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர்.
பத்திரிகைகளில் பிரசுரமான வீடு வாடகைக்கு என்ற விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொண்டு தாம் தனியார் வங்கி முகாமையாளர், தனியார் நிதி நிறுவன முகாமையாளர் என தெரிவித்து வங்கியில் வேலைவாய்ப்புள்ளது என நம்ப வைத்து பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிக்காரர்களின் பேச்சை நம்பியவர்கள் தங்களுடைய பணம் மற்றும் பெறுமதியான சான்றிதழ்களையும் இழந்துள்ளனர்.
இவ்வாறான மோசடி கும்பல்களின் வலையில் சிக்காது பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் இதுபோன்ற மோசடி கும்பலை சேர்ந்த நபர்கள் உங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறும் மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments: