மட்டக்குளிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறிஸ்தவ தேவாலயம், பாடசாலை அமைந்துள்ள பகுதிக்குஅருகில் சந்தேகத்திற்கிடமான வாகனம் உள்ளதாக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது அதிசொகுசு வேன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (16.10.2019) காலை இந்த வாகனம் வீதிக்கருகில் நிறுத்தியிருந்ததை தொடர்ந்து பாடசாலை சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த வாகனத்தில் எவ்வித சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்படவில்லை என பொலிஸ் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்று (15.10.2019) இரவு குறித்த இடத்திலேயே வாகனத்தை வாகனத்தின் உரிமையாளர் நிறுத்திச் சென்றதாக தெரிவித்த பொலிஸார், குறித்த இடத்திற்கு வாகனத்தின் உரிமையாளர் வந்துள்ள போதும் வாகனம் தொடர்பில் பொய்யான வதந்திகள் பரவியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்குளி மற்றும் கம்பஹா மிரிஸ்வத்த பகுதிகளில் பாடசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று உள்ளதாகப் பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
No comments: