
மட்டு போதனா வைத்தியசாலையின் கிழக்கு மாகாண உருவகப்படுத்துதல் மருத்துவ பயிற்சி மையமானது (Eastern Province Simulation Training Centre) ஐரோப்பிய இயக்க மீட்பு சபையின் (European Resuscitation Council) வழிகாட்டலில் இலங்கை மயக்கமருந்து மற்றும் அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் கல்லூரியுடன் (College of Anaesthesiologists and Intensivists of Srilanka) இணைந்து ஒக்டோபர் 16, 2019 புதன்கிழமை இன்று உலக இதய மீளியக்க தினத்தையொட்டி பொதுமக்களுக்கான இதய நிறுத்தம் மற்றும் மீளியக்கம் பற்றிய இலவச விழிப்புணர்வு பயிற்சியினை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கிவருகின்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கே.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வினை மட்டு மாநகர முதல்வர் தி. சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். உயிர் காக்கும் அடிப்படை செயன்முறை தெரிந்தவர்களை சமூகத்தில் உருவாக்குவோம். உங்கள் நேசமானவர்களின் உயிரைக்காப்பதில் நீங்களும் எம்மோடு இணையலாம். எனும் கருப்பொருளில் இடம்பெறும் இலவச இதய மீளியக்க பயிற்சியினை விசேட வைத்திய நிபுணர் ச.மதனழகன் தலைமையிலான வைத்திய குழு வழங்கிவருகின்றது.
கட்டம் கட்டமாக இடம்பெறும் இப் பயிற்சியில் பொலிசார் உட்பட அரச, அரச சார்பற்ற அலுவலக உத்தியோகத்தர்கள், பொது நலம் விரும்பிகள், இளைஞர் யுவதிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
No comments: