News Just In

11/28/2025 02:57:00 PM

மட்டக்களப்பு வாவியின் நிலைகுலைவும் நிரந்தரமானதாக மாறியுள்ள வெள்ள அனர்த்தமும்.!



மட்டக்களப்பு வாவியின் நிலைகுலைவும் நிரந்தரமானதாக மாறியுள்ள வெள்ள அனர்த்தமும்.




மட்டக்களப்பு நகரை அண்டி வெள்ள நிலைமை தலைதூக்கியிருப்பதற்கு மட்டக்களப்பு வாவி ஒரு பிரதானமான காரணமாக உள்ளது என்பதை நீங்கள் அறியாதிருப்பீர்கள். மட்டக்களப்பு வாவி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சமூகத்துக்கு ஒரு அருங்கொடை. புவியியல் பின்னணியில் இப்பிரதேசங்களுக்கு மதிப்பீடு செய்ய முடியாத ஓர் இயற்கை அரண். அப்படிப்பட்ட வாவி பராமரிப்பின்றி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமல் பல தசாப்தங்களாக இருப்பதனால் அதனுடைய நிலைத்திருக்கவல்ல மானிட பயன்பாட்டுக்கும் இயற்கையான திறன்களுக்கும் சவாலாக அமைந்துள்ளது. மீனினங்களின் பெருக்கத்துக்குக் காரணமாக மாறி மாறி நடைபெறுகின்ற சமுத்திர-வாவி நீரோட்டம் இன்று செயலிழந்துள்ளது. உயிரியல் சூழல் அதன் திறனை இழந்துள்ளது. முகத்துவாரம் ஊடாக கடலுக்கு நீர் வெளியேறும் போக்கு தடைப்பட்டுள்ளமை போன்ற வாவியின் அழிவுக்கான அறிகுறிகள் பல காணப்படுகின்றன.

வாவியின் இயற்கையான திறன்கள் இழக்கப்பட்டுள்ளமைக்கு ஓர் அடையாளமாக முகத்துவாரம் முன்கூட்டியே வெட்டப்படுவதையும், சாதாரண மழையும் வெள்ள அச்சுறுத்தலுக்குக் காரணமாக அமைவதனையும் குறிப்பிடலாம். இவை இரண்டுக்குமான ஒற்றைக்காரணம் வாவி தன்னுடைய நீர்தாங்கு திறனை இழந்து நிற்பதே ஆகும். அளவுக்கதிகமான அடையல் படிவுகளால் வாவி நிரம்பிக் காணப்படுகின்றது. அதனால் வாவி கொள்ளவேண்டிய நீரின் கொள்ளவு பங்கினால் குறைந்துள்ளது. குறிப்பாகச் சில இடங்களில் அரைவாசிக்கும் அதிகமாக அடையல்கள் படிந்து காணப்படுகின்றன. இப்படிவுகளைத் தூர்வாருவதற்கான சிறந்த ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது நடைமுறக்கு வருமாக இருந்தால் வாவி புதிய பரிமாணத்தைப் பெற்று தன்னையும் சுதாகரித்துக்கொண்டு, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு நிரந்தரமான தீர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

மட்டக்களப்பு வாவிக்கான நீரடித்தள மாதிரியை நோக்குகின்ற பொழுது வாவி எந்தளவுக்கு தட்டையான ஒரு களமாகக் காட்சியளிக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள முடியும். Sounding நுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட நீரடித்தளப் படமே இது. இதுவே வாவியைத் தூர்வாருவதற்கு அடிப்படையில் தேவையான ஒரு திறவுகேல். அது எம்வசமுள்ளது. அதனைப் பயன்படுத்தி வாவியைத் தூர்வாருவதற்கு யாரும் முன்வருவதாகத் தெரியவில்லை. புதிதாக வாவிக்கு ளுழரனெiபெ செய்வதாக இருந்தால் குறைந்தது ரூபா 3-4 மில்லியன் செலவிட வேண்டும். அந்த தேவை கூட இன்று இல்லை. முயற்சி ஒன்றுதான் அதற்குத் தேவையானதாக உள்ளது. அதனை யார் முன்னெடுப்பது என்பதே நிலவுகின்ற பெரிய வினா. கச்சேரி மட்டத்தில் பல அரசாங்க அதிபர்கள் எடுத்த முயற்சிகள் இன்றுவரை கைகூடாத நிலையில், மட்டக்களப்பு சமூகத்துக்கே அதனை நிறைவேற்றுவதற்கான பாரிய பொறுப்பு உள்ளது.

இவ்வாறாக வாவியின் புவியியல் நிலைமைகள் மாற்றமடைந்துள்ள காரணத்தினால் வாவியை அண்டிய சில இடங்கள் சாதாரண மழையிலும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. தற்போதைய வானிலை நிலைமையில் மட்டக்களப்பு நகரை அண்டிக் காணப்படும் ஊறனிக்குடா, கீரியோடை, முகத்துவாரக் கால்வாய் பகுதிகள் மிகவும் நலிவுநிலைப் பகுதிகளாக உள்ளது. அதனைச் சூழ்ந்த குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. காரணம், அப்பகுதிகளில் அவை கொள்ளவேண்டிய மொத்த நீரின் கொள்ளவில், அரைவாசிக்கும் அதிகமாக அடையல் படிவுகள் வளர்ந்துள்ளமையேயாகும். சுமார் 22 இடங்களில் உடனடியாகத் தூர்வாரவேண்டிய இடங்களாக வாவியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னுரிமை அடிப்படையில் தூர்வாருவோமானால் வெள்ளம் என்பது பல பகுதிகளை விட்டு வெகுதூரத்துக்குச் சென்றுவிடும். வாவிக் கரையோரத்தில் உள்ள மக்களின் எதிர்காலம் பாதுகாப்பனதாக அமையும். வாவிக் கரையோரத்தை அண்டி சுற்றுலாவுக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் நிலைபேண் தன்மை கொண்டதாக மாற்றமடையும். வாழ்வாதாரமாக மேற்கொள்ளப்படும் விவசாயம் விவசாயிகளுக்கு நல்ல வாழ்வை அளிக்கும். மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் முரண்பாடுகளின் புள்ளியாக வலிந்து திறக்கப்படும் பாலமீன்மடு முகத்துவாரம் இயற்கை நியதிகளுக்கு உட்பட்டதாக மாற்றமடையும், ஆனால் இவை அனைத்தும் இன்று சவால்மிக்கதாகவே மாறியுள்ளது. அனைத்துக்கும் ஒரே தீர்வு வாவியைத் தூர்வாருவதே ஆகும். ஆகவே மக்கள் மனமுவந்து முன்வந்தால் தூர்வாருவதை துரிதகதியில் முன்னெடுப்பதற்கான வழிபிறக்கும் என்பதில் மாற்றமில்லை

கிருபா இராஜரெட்ணம்
சிரேஸ்ட விரிவுரையாளர்
புவியியற்றுறை
கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments: