தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில் 100 மி.மீ. மழை வீழ்ச்சி - வளிமண்டலவியல் திணைக்களம்
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது திங்கட்கிழமை (24) மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகத் தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே, நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை, அடுத்த சில நாட்களிலும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 16ஆம் திகதி முதல் நேற்று வரை இயற்கை அனர்த்தங்களால் 10 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ரம்புக்கணை - மாவனல்லை வீதியில் முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியின் சாரதியான, மாவனல்லையைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று விழுந்ததில் இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் சிக்கினர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து, சிக்கியிருந்தவர்களை மீட்டு மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதித்ததைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டியின் சாரதி காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார். காயமடைந்த ஏனையோர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: