News Just In

10/17/2019 01:07:00 PM

மகளிர் கால்பந்தாட்டத்தை மேம்படுத்த மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபை நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகளிர் கால்பந்தாட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்த மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபை துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி சபையின் தலைவருமான மாணிக்கம் உதயகுமார் எடுத்துகொண்ட முயற்சியின் பயனாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் மாவட்டத்தில் உள்ள மகளிர் கால்பந்தாட்ட வீராங்கணைகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சத்துணவுகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் அரசாங்க அதிபரின் வேண்டுகோளின்படி புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் நிதி உதவியில் மகளிர் உதைபந்தாட்ட துறையில் ஆர்வமுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், பாதணிகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு உபகரணங்ளை கையளிக்கும் விசேட நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் 14.10.2019 அன்று நடைபெற்றது. அரசாங்க அதிபர் உதயகுமார் விளையாட்டு உபகரணங்களை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். 

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் த.ஈஸ்பரன், புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் பொறுப்பதிகாரி எம்.ஜெயராஜன், திட்ட இணைப்பாளர் திருமதி.மேரி ரம்பட் மயூரன் மற்றும் விளையாட்டு திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்

மகளிர் உதைபந்தாட்ட உதவித்திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்தோர் சர்வதேச அமைப்பின் அணுசரனையில் அரசாங்க அதிபர் உதயகுமார் வேண்டுகோளின்படி மாவட்டத்திலுள்ள முன்னணி மகளிர் கால்பந்தாட்ட கழக அணிகளுக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றுவருகின்றது. 

No comments: