
மட்டக்களப்பு மாநகரின் நிலையான அபிவிருத்தியினைக் கருத்தில் கொண்டு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் 1000 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நகரின் மத்தியில் நிலவும் சனநெரிசலை கட்டுப்படுத்தவும், கால விரயத்தினைக் குறைக்கும் நோக்கோடும் 3 கிலோ மீற்றர் நீளமும் 11 மீற்றர் அகலமும் கொண்ட ஓர் மாற்றுப்பாதையொன்றினை அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி வீதி அபிவிருத்திப் பணிகளில் முதற்கட்டமாக போக்குவரத்துக்கு இடைஞ்சலான முறையில் மிகக் குறுகிய ஒழுங்கையாக காணப்பட்ட புகையிரத ஒழுங்கையானது 15 மீற்றர்கள் அகலம் கொண்ட வீதியாக விஸ்தரிக்கப்படவுள்ளது.
மொத்தமாக 20 மில்லியன்கள் செலவு மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த அபிவிருத்தி பணிகளின் முதற்கட்ட பணிகளுக்காக 7மில்லியன்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன.
அப்பாதையில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வாசஸ்தலம் ஒன்று முற்றாக உடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவே குறித்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாசஸ்தலமானது இன்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் முன்னிலையில் உடைக்கப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், மாநகர சபையின் உறுப்பினர்கள், மாநகர பொறியியலாளர் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
2009 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து இலகினைக் கருத்தில் கொண்டு ஒழுங்கைக்கான காணியை புகையிரத திணைக்களத்தின் அப்போதைய பொதுமுகாமையாளராகவிருந்த ருவான் குண்ரூவன வழங்கியதோடு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்தும் வைத்தார்.
பெரும்பாலும் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டிலிருந்து வந்த மேற்படி ஒழுங்கையானது தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அதனால் போக்குவரத்து நெருசல் ஏற்படுவதோடு குற்றச் செயல்கள் பல இடம்பெறுவதோடு, தனியாக வரும் பெண் பிள்ளைகள் பாலியல் தீண்டல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளனர். பல சமுக சீர்கேடுகளுக்கும் இடம்பெறும் இடமாகவும் அமைந்திருந்தது.
இவ்வாறான பிரச்சனைகள் தொடர்பில் மாநகர முதல்வர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் முறைப்பாடுகள் செய்யபட்டதோடு, நகரின் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான மாற்றுப் பாதையாக இதனை உருவாக்கும் திட்ட மொன்மொழிவும் கௌரவ முதல்வரால் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ் ஒழுங்கையினை விஸ்தரிப்பு செய்வதற்காக போக்கு வரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜீண ரணதுங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உடன் மாநகர முதல்வர் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து கிடைக்கப்பெற்ற வழிகாட்டலில் புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய பொறியியலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஆகியோரின் அனுமதியுடன் குறித்த ஒழுங்கையினை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கான 3 மில்லியன் ரூபாய் நிதியினை கம்பெரலிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பாராளமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஒதுக்கியிருந்ததோடு மிகுதி வேலைகளுக்கான மாநகர சபையினதும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினதும் பங்களிப்புகளுடன் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுறுத்தப்படவுள்ளது.
முழுமையாக 2021 ஆம் ஆண்டில் பூரணப்படுத்தும் இலக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த வேலைகள் முழுமை பெற்றதும் இப்பாதையால் மட்டக்களப்பு நகரில் போக்குவரத்து நெரிசலையும், வீணான கால தாமதங்களையும் குறைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments: