News Just In

9/20/2019 10:41:00 AM

பாதிக்கப்பட்ட சிவானந்தா மாணவர்களுடனான சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் கலந்துரையாடல்

கடந்த 14.09.2019 சனிக்கிழமை சிவானந்தா பாடசாலை மைதானத்தில் நடாத்தப்பட்ட கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் போது இடம்பெற்ற கைகலப்பில் பொலிசாரின் தடியடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றார்களுடன் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் கலந்துரையாடல் இன்று (19.09.2019) மாலை கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபரின் அழைப்பின் பெயரில் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்கள் மீது குண்டாம் தடி பிரயோககத்தை பொலிசார் மேற்கொண்டது கவலை தரும் விடயம். பாடசாலை எல்லைக்குள் இச்சம்பவம் நடைபெற்ற போதும் பாடசாலை நிருவாகம் கண்டுகொள்ளாதது கண்டிக்கத்தக்கது. சம்பவம் நடைபெற்றது ஆறு நாட்கள் கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களையோ அன்றி பெற்றாரையோ இதுவரை பாடசாலை நிர்வாகத்தினர் அழைத்து ஆறுதல் வார்த்தைகள் கூறாமல் நடந்த சம்பவத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர் என இக் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த பெற்றார்கள் எமது பிள்ளைகள் பொலிசாரினால் தாக்கப்பட்டதால் பாதிப்புக்குள்ளானதுடன் அவர்களுக்கான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவில்லை, அதுமாத்திரம் இல்லாமல் சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்துவிட்ட பின்னரும் சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்,பாடசாலை தொடர்பான அமைப்புக்கள் மற்றும் அதிபர் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக எங்களுடன் பேசாமால் மௌனம் காப்பது வேதனையளிக்கின்றது எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம் பெறக்கூடாது எனவும் தங்களது ஆதங்கங்களை ஒன்றியத்திடம் கூறினர்.

மாணவர்கள் தாக்கப்பட்டபோது நியாயம் கேட்கச் சென்ற சகோதரனை மதுபோதையில் உள்ளதாக பொய் குற்றம் சாட்டி கைது செய்தமை, தந்தை ஒருவரை தாக்கமுற்பட்டது, மைதான வாசலை மூடிவிட்டு மாணவர்களை கண்மூடித்தனமாக பொலிஸ் குண்டாம் தடி கொண்டு தாக்கியபோதும் அதிபர், ஆசிரியர்கள் கண்டு கொள்ளாது இருந்தனர் என்பதும் பெற்றார்களின் குற்றச்சாட்டாக இருந்தது.




No comments: