News Just In

4/04/2026 09:27:00 PM

வாகரை மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு காண களமிறங்கிய சாணக்கியன் எம்.பி வாகரை மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

வாகரை மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு காண களமிறங்கிய சாணக்கியன் எம்.பி வாகரை மக்களின் காணி உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை
: சாணக்கியன் எம்.பி நேரில் ஆய்வு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசத்திற்குட்பட்ட கதிரவெளி புதூர், இராமர் தீவு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் எதிர்நோக்கும் காணி உரிமைப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் நேற்று (03.04.2026) அப்பகுதிக்கு விஜயம் செய்தார்.

இராமர் தீவு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக பராமரித்து பயன்படுத்தி வரும் காணிகளுக்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும், இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் மக்கள் எம்.பியிடம் முறையிட்டனர்.
இதன்போது மக்களிடம் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் 'வாகரைப் பிரதேசம் என்பது பல வளங்களை கொண்ட பகுதி. மண்வளம், கடல்வளம், ஆறுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் நிரம்பியிருந்தாலும், இப்பகுதி மக்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.குறிப்பாக, இங்குள்ள பல காணிகள் வாகரை மக்களுக்குச் சொந்தமானவையா என்பது தொடர்பில் குழப்பநிலை நிலவுகிறது. உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டவர்களுக்கும், பிறமாவட்டங்களைச்சேர்ந்தவர்களுக்கும்காணிகள்உரிமைப்படுத்தப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இங்குள்ள பல குடும்பங்கள் பல ஆண்டுகளாக தாங்கள் பயன்படுத்தி வரும் காணிகளுக்குக் கூட இதுவரை எந்தவிதமான சட்டப்பூர்வ ஆவணங்களையும் பெறவில்லை. இந்த விடயம் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்பது எமது பொறுப்பாகும்.

குறிப்பாக, இராமர் தீவு உள்ளிட்ட பகுதிகளில் நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் விவசாயக் காணிகளுக்கான உரிய ஆவணங்களைப் பெறுவதற்காக பிரதேச செயலாளர் மற்றும் காணி அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மக்கள் விரும்பும் வகையில் உரிமை ஆவணங்களைப் பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும்'ழூழூ எனத் தெரிவித்தார்.
மேலும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அவர்களது நில உரிமை பிரச்சினைகளை சட்டரீதியாகத் தீர்க்கும் பணியில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில், கோறளைப்பற்று பிரதேச சபை (வாழைச்சேனை) பிரதேச சபை தவிசாளர் சு.சு. தாகரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை (வாகரை) பிரதித் தவிசாளர் ச. ரவிக்கரன், கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை (வாகரை) பிரதேச சபை உறுப்பினர் ப. மோகனராசா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்று வடக்கு பிரதேச கிளை (வாகரை) பொருளாளர் க. அலெக்ஸ் நிரோசன், இராமர் தீவு விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கதிரவெளி புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்

No comments: