
இலங்கையில் முந்தைய அரசாங்கங்களின் போது பல தமிழ் இளைஞர்களை நீண்டகாலமாக தடுத்து வைக்க வழிவகுத்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), இந்த முறை EPDP தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை குறிவைத்து ஒரு பரபரப்பான விடயமாக மாறியுள்ளது.
சந்திரிகா மற்றும் ராஜபக்சர் ஆட்சிகளின் போது அரசாங்கத்தை ஆதரித்த சக்திவாய்ந்த அமைச்சரான அவர், தற்போது அதே சட்டத்தின் கீழ் விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 72 மணி நேரம் அவரை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட விடயம் விதியின் முரண்பாடாக பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும் 90 நாட்கள் தடுப்புக்காவல் பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் நீதிமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை டக்ளஸ் தேவானந்தாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தக் கைதுக்கான உடனடி காரணம், 2020 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் மாகந்துர மதுஷின் சகா ஒருவரின் வசம் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பிற்காக பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த பாதாள உலகக் குழு உறுப்பினர், சம்பந்தப்பட்ட துப்பாக்கியை டக்ளஸ் தேவானந்தா தனக்குக் கொடுத்தார் என்றும், பல கொலைகளைச் செய்ய அந்தத் துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தொடுப்பது சவாலானது என்பதால், டக்ளஸ் தேவானந்தா ஆயுதத்தை மாகந்துர மதுஷிடம் ஒப்படைத்ததை நேரில் கண்ட நபர்களைக் கைது செய்து அரச சாட்சிகளிடம் ஒப்படைக்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இப்போது விரிவான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக டக்ளஸ் தேவானந்தாவை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.ஐ.டி அரசிடம் அனுமதி கோரியிருந்தாலும், பாதுகாப்பு உயர் தரப்புக்களின் கட்டளைகளின் பிரகாரம் 72 மணி நேரத்திற்குள் விசாரணைகளை முடிக்க உத்தரவிட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் மேற்கோள்காட்டுகின்றன.
No comments: