நூருல் ஹுதா உமர்
வெள்ளம் மற்றும் ‘டித்வா’ புயலின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை மக்களின் மனிதாபிமான நிவாரண நடவடிக்கையின் இரண்டாம் சுற்றில், கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சியினால் சேகரிக்கப்பட்ட நிதியுதவியின் கீழ், கடுமையாக பாதிக்கப்பட்ட 1,100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய வீட்டு உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் சந்தைப் பெறுமதி ரூபா 12,000.00 உடைய இப்பொதிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிவாரண நடவடிக்கையின் முதற்கட்டமாக, பொலன்னறுவை மாவட்டத்தின் கல்லேல பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மூவினத்தை சேர்ந்த 370 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு (27.12.2025) வெற்றிகரமாக நடைபெற்றது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம். ஐ. அப்துல் அஸீஸ் மற்றும் கல்முனை முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் எம். ஜே. அப்துல் சமத் ஆகியோரின் தலைமையில் புறப்பட்ட கல்முனை நிவாரண விநியோகக் குழுவினரால், கல்லேல ஜும்ஆ பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினரால் அடையாளம் காணப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
பொருளாதார ரீதியான உதவிகளுக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு கல்முனை மக்களால் வழங்கப்பட்ட புனித குர்ஆன் பிரதிகள் 150 மற்றும் முஸல்லாக்கள் 95 ஆகியவை தேவையுடைய குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து நேரடியாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிவாரண நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை தணித்து அவர்களின் இயல்பு வாழ்க்கை மீளுருவாக்கம் பாதையில் உறுதுணையாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: