தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்- ரெலோ- தலைமை பதவியிலிருந்து விலக, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை காலஅவகாசம் கோரியுள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
நேற்று (9) வவுனியாவில் நடந்த தலைமைக்குழு கூட்டத்தில், அவர் உடனடியாக தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் கடுமையாக வலியுறுத்திய நிலையில், ஜனவரி மாதம் பதவிவிலகுவதாக அவகாசம் கோரினார்.
நேற்றைய தலைமைக்குழு கூட்டம் வவுனியா நெல்லி ஹொட்டலில் நடந்தது.
கூட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதன் தலைமை தாங்க முயன்ற போது, உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இன்றைய நிகழ்ச்சி நிரலில், செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகார ஒலிப்பதிவு குற்றச்சாட்டு, எதிர்வரும் ஏப்ரலில் நடக்கவிருக்கும் கட்சியின் தேசிய மாநாட்டுக்கான ஏற்பாடு குறித்து விவாதிப்பதாக இருந்தது. குற்றம்சாட்டப்பட்ட செல்வம் அடைக்கலநாதனே கூட்டத்துக்கு தலைமை தாங்க முடியாது என உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்கினர்.
இதனால் சலசலப்பு ஏற்பட, கூட்டத்தை தலைமை தாங்குவதிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலகிக் கொண்டார். உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது.
தலைமைக்குழு உறுப்பினர்கள் நேரிலும், இணைய வழியிலுமான 18 பேர் கலந்து கொண்டனர்.
செல்வம் அடைக்கலநாதன் மீதான பெண் விவகாரம் பற்றிய குற்றச்சாட்டை பல தலைமைக்குழு உறுப்பினர்கள் முன்வைத்து, காரசாரமான கருத்துக்களை தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் செல்வம் அடைக்கலநாதன் பிழையாக நடந்து கொண்டார் என்ற சாரப்படவே அனைத்து தலைமைக்குழு உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.
செல்வம் அடைக்கலநாதன் மௌனமாக அதை கேட்டுக் கொண்டிருந்தார்.
உபதலைவர் ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சபா குகதாஸ், சிங்கன், வினோ நோகராதலிங்கம் போன்றவர்கள்- செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமைப்பதவிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தினர்.
தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரலில் கட்சியின் தேசிய மாநாட்டில் தான் போட்டியிடவில்லையென்றும், அதில் விரும்பிய ஒருவரை தலைவராக தெரிவு செய்யுங்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
எனினும், அவரை பதவிவிலக வலியுறுத்திய உறுப்பினர்கள் அதை ஏற்கவில்லை. உடனடியாக பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தினர்.
இறுதியில், எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் தேசிய மாநாட்டை நடத்தி, புதிய தலைவரை தெரிவு செய்யுங்கள். அதில், கட்சியின் தலைமைக்குழு உறுப்பினராகவோ, மத்திய குழு உறுப்பினராகவோ நான் கலந்து கொள்ளமாட்டேன் என செல்வம் அடைக்கலநாதன் கேட்டார்.
ஹென்றி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார;, சபா குகதாஸ், சிங்கன், வினோ நோகராதலிங்கம் தவிர்ந்த ஏனையவர்கள்- செல்வம் அடைக்கலநாதனின் கோரிக்கையை ஏற்கலாம் என்றும், அவரை ஜனவரி வரை தொடர அனுமதிக்கலாமென்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து, எதிர்வரும் ஜனவரியில் நடக்கும் ரெலோவின் தேசிய மாநாடு வரை தலைமைப்பதவியில் செல்வம் அடைக்கலநாதன் தொடர்வதென தீர்மானமானது.
இதேவேளை, கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தலா ஐந்து தலைமைக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments: