News Just In

10/10/2025 09:32:00 AM

தன்னெழுச்சியாக சேரும் தவெக - அதிமுக தொண்டர்கள்! - கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

தன்னெழுச்சியாக சேரும் தவெக - அதிமுக தொண்டர்கள்! - கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்



கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த திடீர் பாய்ச்சலுக்கும் காரணம், தவெக உடனான தனது கூட்டணிக் கனவு சிதைந்து விடுமோ என்ற ஆதங்கம் தான் என்கிறார்கள்.

"கரூர் சம்பவத்துக்கு விஜய் தார்மிக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அது குற்றத்தை ஏற்பது ஆகாது. இதில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார். ஸ்டாலின் அனுபவமிக்க தலைவராக உள்ளார்" என்று விஜய்யை விமர்சித்து முதல்வரை பாராட்டிய தினகரன், "கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

உயிரிழப்பு நேரத்தில் நரித்தனமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை கண்டிக்கிறோம். தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவரவே ஆளுங்கட்சி மீது பழனிசாமி பழி போடுகிறார்" என்று சொன்னதிலிருந்தே அவரது ஆதங்கத்திற்கான காரணத்தை அறிந்து கொள்ள முடியும்.

பாஜக கூட்டணியை விட்டு தினகரன் வெளியேறிவிட்ட நிலையில், அவரால் திமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது. அவருக்கு இருக்கும் ஒரே கூட்டணி கதவு தவெக தான். அந்த நம்பிக்கையில் தான், தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, "எதுவும் நடக்கலாம்" என்று முன்பு சொல்லி வந்தார்.

இந்த நிலையில், கரூர் சம்பவத்தை முன்வைத்து விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என இப்போது பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த இபிஎஸ்ஸுக்கு தவெகவினர் கட்சிக் கொடிகள் சகிதம் வந்து வரவேற்பு கொடுத்தார்கள். தருமபுரி தொகுதியில் விஜய் படத்தை போட்டு பழனிசாமிக்கு ஃபிளெக்ஸ் வைத்திருந்தார்கள். விஜய்யை இபிஎஸ் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக வரும் செய்திகளையும் இருதரப்பிலும் மறுப்பார் இல்லை.

இப்படி, கரூர் சம்பவத்தில் தங்களுக்கு ஆதரவாக நிற்கும் அதிமுகவுடன் இயல்பாகவே தவெக கூட்டணி அமையக் கூடிய சூழல் உருவாகி வரும் நிலையில், அது நடந்தால் தனக்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் அடைபட்டுப் போய்விடும் என்று தினகரன் கருதுகிறார். பாஜக இல்லை என்றால் தவெகவுடன் போய்விடலாம் என அவர் தெம்பாக இருந்த நிலையில், தவெக கூட்டணிக்கு அதிமுக முயல்வது அவரை பதற்றம் கொள்ள வைத்திருக்கிறது.








No comments: