பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைமீறல் மனு மீதான விசாரணை ஜூன் 23 இல்!
தன்னை கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எடுத்த நடவடிக்கை ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, மேனகா விஜயசுந்தர மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய குழாம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் மன்றில் விடயங்களை முன்வைத்து இந்த மனு தொடர்பான முதற்கட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இரு வார கால அவகாசம் கோரினார்.
இதற்கமைய மனு தொடர்பிலான ஆட்சேபனைகளை முன்வைக்க பிரதிவாதி தரப்புக்கு அனுமதி வழங்கிய நீதியரசர்கள் குழாம் மேலும் இது தொடர்பில் மனுதாரர் சார்பில் ஆட்சேபனைகள் இருக்குமாயின் அவற்றையும் ஒரு வார காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட விசாரணை பிரிவு சிறப்புப் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இமேஷா முத்துமால, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு மட்டக்களப்புப் பகுதியில் வைத்து தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் கூறுகிறார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறும் மனுதாரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தூங்குவதற்குக் கூட தனக்கு போதுமான வசதிகள் இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் சட்டத்தரணிகளை சந்திக்க போதுமான வாய்ப்பு தனக்கு இல்லை என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னைக் கைது செய்து தடுத்து வைத்தது. தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும், தன்னைத் தடுத்து வைக்கப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை செல்லாததாக்கும் தீர்ப்பை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தைக் கோரினார்.
மேலும் தனது சட்டத்தரணிகளை அணுகுவதைத் தடுப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க மாறும் தனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபா இழப்பீட்டை பெற்றுத் தருமாறும் பிள்ளையான் தனது சட்டத்தரணிகள் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
6/19/2025 08:08:00 AM
Home
/
Unlabelled
/
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைமீறல் மனு மீதான விசாரணை ஜூன் 23 இல்!
பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைமீறல் மனு மீதான விசாரணை ஜூன் 23 இல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: