News Just In

12/09/2025 07:19:00 PM

நிமல் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்கு வவுனியாவில் 25 ஏக்கர் காணி : அம்பலப்படுத்தியது.ரவிகரன் எம்.பி

நிமல் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்கு வவுனியாவில் 25 ஏக்கர் காணி : அம்பலப்படுத்தியது.ரவிகரன் எம்.பி




மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு வவுனியா வடக்கில் 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்கவா போகின்றீர்கள். எம்மை சுட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றையதினம் (09)கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா வடக்கில் ஆக்கிரமிக்கப்படும் நிலம்

வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக இதனை அவதானித்தேன்.



இதனை ஏன் இந்த திணைக்களங்களால் தடுக்க முடியவில்லை. ஒரு மண்வெட்டி பிடியை கூட நாங்கள் வெட்ட முடியாது. அதற்கு வழக்குப்போடும் இவர்களால் இதனை தடுக்க முடியாதா.

வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன நடந்தது. ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கத்திடம் கேட்கிறேன் இது ஊழல் இல்லையா. இது தொடர்பாக நீங்கள் கூடிய கவனம் எடுக்கவேண்டும்.
மகாவலி அதிகாரசபை

இந்த விடயம் தொடர்பாக கேட்டபோது மகாவலி அதிகாரசபை சொல்கிறது நீங்களும் பெயர்ப்பட்டியலை தாருங்கள் உங்களுக்கும் அங்கு காணி வழங்குவோம் என்று கூறினார்கள். யாருடைய காணியை இவர்கள் யாருக்கு வழங்கப் போகின்றார்கள்.



வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபிள் ஓயாத்திட்டத்தில் பயனடையும் தமிழ் மக்கள் ஒருவரின் பெயர் உள்ளதா. நிமால் சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு மகாவலித்திட்டத்தின் கீழ்25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் நான் கூறவில்லை.அதன்படி 30 பேருக்கு 25ஏக்கர் படி அங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது.

அப்படியானால் தமிழ்மக்களை கடலுக்குள் தள்ளவா போகின்றீர்கள். இது தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்ட பூர்விக காணிகள். வவுனியா வடக்கை அத்திப்பட்டி போல காணாமல் ஆக்கப் போகிறீர்களா. அதற்கு நான் விடமாட்டேன்.

இப்பிடியான அநீதியான வேலைகளை முதலில் நிறுத்துங்கள். இல்லாவிடில் ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி கடும் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். எங்களை சுட்டாலும் எமது எதிர்ப்பை காட்டியே தீருவோம் என்றார்.

No comments: