நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்துவரும் நிலையில், மீண்டும் ஸ்திரமற்ற நிலை தோன்றுவதற்கு வழிகோலும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும், ஆகவே ஜனாதிபதித்தேர்தல்களைப் பிற்போடுவதே தற்போதைய சூழ்நிலையில் சிறந்த தீர்மானமாக அமையும் எனவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித்தேர்தல் நடத்தப்படவேண்டிய தினம் தொடர்பில் நீதிமன்றத்தினால் வியாக்கியானம் வழங்கப்படும் வரை தற்போது திட்டமிடப்பட்டுள்ளவாறு ஜனாதிபதித்தேர்தல் நடத்தப்படுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறக்குமாறுகோரி தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் பின்னணியில், தமிழ்த்தேசிய கட்சிகளில் ஒன்றான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது நாட்டுக்கு நன்மையளிப்பதாகவே அமையுமெனத் தெரிவித்துள்ளார்.
'தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித்தேர்தலை நடத்தினால், எந்தவொரு வேட்பாளரினாலும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளமுடியாது. எனவே கட்சிகள் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் செயற்படவேண்டியிருக்கும்' எனச் சுட்டிக்காட்டியுள்ள விக்னேஸ்வரன், அது தற்போது நாட்டில் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் ஸ்திரத்தன்மையை மாற்றியமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
'எமது பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் மீண்டும் ஸ்திரமற்றத்தன்மை தோன்றுவதற்கு வழிகோலுவதானது நாட்டின் நலனுக்குப் பாதகமானதாக அமையும். ஜனாதிபதித்தேர்தலைப் பிற்போடுவது ஜனநாயகத்துக்கு முரணானதெனில், அவ்வாறு இருக்கட்டும். தற்போதைய சூழ்நிலையில் நாட்டுமக்களின் நிலை, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மக்களின் பாதுகாப்பு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும்' எனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி எம்மால் மக்களின் வாழ்க்கையுடன் விளையாடமுடியாது எனவும், ஆகவே தேர்தல்களைப் பிற்போடுவதே சிறந்த தீர்மானம் எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இவ்விடயத்தில் இறுதித்தீர்மானம் உயர்நீதிமன்றத்தின் வசமே இருக்கின்றது எனவும் கூறியுள்ளார்
No comments: