News Just In

1/24/2024 09:45:00 AM

பதிலீடின்றி மேற்கொள்ளப்பட்ட வைத்திய பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை ரத்துசெய்யவும்!

கிழக்கு ஆளுநருக்கு பல அமைப்புக்கள் இணைந்து கோரிக்கை!




அபு அலா -
திருகோணமலை மாவட்ட - புல்மோட்டை தள வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகின்ற வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீனின் வருடாந்த இடமாற்றத்தில் அவருக்குப் பதிலாக எந்த பதிலீடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருவதை நிறுத்தக்கோரி புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பல அமைப்புக்களும், பொதுமக்களும் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

புல்மோட்டை காட்டுத்தென்னை விவசாய சம்மேளனம் மற்றும் அல் - மஸ்ஜிதுல் நூறானியா பள்ளிவாசல் நிர்வாகம் உள்ளிட்ட அப்பிரதேச மக்கள் இணைந்து இந்த கோரிக்கை அடங்கிய கடிதங்களை இன்று (23) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கையளித்து வைத்துள்ளதாக குறித்த அமைப்புக்களும் அப்பிரதேச மக்களும் தெரிவித்தனர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எங்களது பிரதேசத்தில் அமைந்துள்ள தள வைத்தியாலைக்கு 7 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுகின்றபோது, இங்கு 3 வைத்தியர்கள் மாந்திரமே கடமை புரிந்து வருகின்றனர். இந்நிலைமையில், மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வருகின்ற வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீனின் வருடாந்த இடமாற்றத்தில் அவருக்குப் பதிலாக எந்த பதிலீடுகளும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த இடமாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏலவே புல்மோட்டை மக்கள் தொகைக்கேற்ப வைத்தியர்கள் பற்றாக்குறையாக காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் பதிலீட்டு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாமல் தரமுடைய ஒரு வைத்தியரை இடமாற்றம் செய்வதென்பது 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புல்மோட்டை கிராம மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீன் என்பவர் அவருடைய சேவைக் காலத்தில் மிகவும் சிறப்பான வைத்திய சேவையை காலநேரம் பாராது செய்து வருவதுடன் புலமோட்டை கிராம மக்களின் நன்மதிப்பையும் வென்றவருமாவார். அது மட்டுமில்லாமல் COVID-19 காலப்பகுதியில் வைத்தியர்கள் ஒருவருமே இல்லாத சந்தர்ப்பத்தில் தன்னுயிரையும் பாராது தனியாளாக நின்று விடுமுறையும் பெற்றுக்கொள்ளாமல் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த வைத்தியர் ஒருவராவார். அக்காலப்பகுதியில் அவர் செய்த தியாகங்களையும், வைத்திய சேவையையும் எங்களால் இலகுவில் மறந்துவிட முடியாது.

எனவே வைத்தியர் எம்.எ.எம்.மொஹைதீனின் இந்த இடாற்றத்தினை ரத்துச் செய்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு அவரின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென்று புல்மோட்டை காட்டுத்தென்னை விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.அஸீஸ், அதன் செயலாளர் ஏ.எல்.அப்துல் சலாம் மற்றும் புல்மோட்டை அல் - மஸ்ஜிதுல் நூறானியா பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவர் கே.ரீ.மசூர்டீன், அதன் செயலாளர் ஐ.எம்.வசீம் ஆகியோர் தெரிவித்தனர்.


No comments: