News Just In

11/16/2023 07:11:00 AM

பாடசாலை மாணவர்களின் உளநல, சமூக அபிவிருத்தி தொடர்பான பயிற்சி செயலமர்வு!

பாடசாலை செல்லும் இளம் பருவத்தினரின் உளநல, வாழ்வியல் மற்றும் சமூக அபிவிருத்தி தொடர்பாக சுகாதார மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் செயலமர்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தாய், சேய் நலப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் குறித்த செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தார்.

சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் அனுசரணையில் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற செயலமர்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் கல்வி வலயங்களின் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை தரவு மீளாய்வு, இள வயது பருவத்தினரின் வளர்ச்சி, குழந்தை வளர்ப்பு, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் மன அழுத்தம், போதைக்கு அடிமையாகும் சந்தர்ப்பங்களும், அதனை தடுப்பதற்கான வழிகளும், உள புத்தாக்க பயிற்சி, விசேட தேவையுடைய பிள்ளைகளை கையாளும் முறை, பிள்ளைகளின் வாழ்க்கையில் தற்கால தொழிநுட்பம் (சமூக ஊடங்கள்) ஏற்படுத்தும் தாக்கம் என பல்வேறு தலைப்புக்களில் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், தாய், சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டொக்டர் றொசான்ந், பிராந்திய தகவல் முகாமைத்துவ பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எம்.முஜீப், உளநல வைத்திய அதிகாரி டொக்டர் சராப்டீன் ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர் 

No comments: