News Just In

11/16/2023 07:17:00 AM

வாசிப்பை ஊக்குவிக்க மாணவர்கள் மத்தியில் அறிவுச்சுடர் போட்டி!

மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் அனுசரணையோடு தெளஸ் மகே பாகன வேலை திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்திய அறிவுச் சுடர் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் மத்திய முகாம் அல்-ஹிறா பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.எல்.சனூஸ் தலைமையில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு 56 பக்கங்களைக் கொண்ட பாடப்பரப்பு உள்ளிட்ட விடயதானங்கள் வழங்கப்பட்டு மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்தி பின்னர் அந்த பக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்ட போட்டியாக இந்த அறிவுச் சுடர் போட்டி ஆறு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகியின் வழிகாட்டலில் பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸ் ஒருங்கிணைப்பில் மிகவும் சிறப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் பொது அறிவு வினாக்கள், பாடப்பரப்பில் உள்ள வினாக்கள், மாணவர்கள் அறிந்திருக்க வேண்டிய இதர தகவல்களை உள்ளடக்கியதான வினாக்கள் கேட்கப்பட்டன. இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பற்றிய சகல மாணவர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம். றின்சான், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாச்சார உத்தியோகத்தர் திருமதி நகுலநாயகி, கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சார்மிலராஜன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுல்பிக்கா, சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஏ.ஆர்.ஜனூபா, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம்.ரிபாயா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். அறிவுச்சுடர் போட்டியினை பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஆர்.எஸ். மப்றாஸ் (நளிமி) தொகுத்து வழங்கினார்.

No comments: