News Just In

6/07/2023 06:54:00 PM

கஜேந்திரகுமார் விடயத்தில் கட்சி பேதம் பாராமல் குரல்கொடுக்க வேண்டும் : இரா.சாணக்கியன்!




கட்சி பேதம் பாராமல் கஜேந்திரகுமாரினது சிறப்புரிமை மீறப்பட்டமைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை குறித்து இன்று நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நேர்ந்த ஒரு தவறான செயற்பாடாகவே இவ்விடயம் கருதப்படுகின்றது.
நாடாளுமன்றுக்கு வருகைத் தந்து, உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாவதாக அவர் கூறிய நிலையிலேயே இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கொலைக் குற்றத்திற்காக நீதிமன்றில் தண்டனை பெற்ற பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டிருந்தார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்த சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு சிறையில் இருக்கும்போதுகூட வருகை தந்தார்.
இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று நாடாளுமன்றுக்கு வருகை தருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
எனினும், கட்சி பேதம் பாராமல் அவரது சிறப்புரிமை மீறப்பட்டமைக்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரைப் பார்த்து அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கூறுவது நியாயமான ஒன்றாகும். ஏனெனில், அவரது தந்தையார் இரண்டு பொலிஸாரினால்தான் கொழும்பில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

எனவே, தன்னை பின் தொடர்ந்து பொலிஸார் வருவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சந்தேகம் எழுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அத்தோடு, இன்று நாடாளுமன்றுக்கு வருகை தந்து உரையாற்றிவிட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சபாநாயகர் அறிவித்திருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் இதற்கெதிராக குரல் கொடுத்திருக்க வேண்டும். நாம் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்காக பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரைக்கூட பயன்படுத்தாத ஒருவர்.இவருக்கு இன்று இடம்பெற்ற நிலைமை நாளை இங்குள்ள ஏனையவர்களுக்கும் ஏற்படக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments: