News Just In

2/21/2023 09:48:00 AM

சைவமங்கையர் கழகத்தினரால் சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயத்தின் 125ஆவது ஆண்டை நினைவு கூரும் விழாவும் சாதனையாளர் பாராட்டும்!!






மட்டக்களப்பு கல்லடி சைவமங்கையர் கழகத்தினரால் சுவாமி விவேகானந்தரின்இலங்கை விஜயத்தின் 125ஆவது ஆண்டை நினைவு கூரும் விழாவும் சாதனையாளர் பாராட்டுவிழாவும் மட்டக்களப்பில் மிகவு விமர்சையாக இடம்பெற்றது.

சைவமங்கையர் கழகத்தின் தலைவியும் ஓய்வு நிலை அதிபருமாகிய திருமதி.திலகவதி ஹரிதாஸ் அவர்களின்தலைமையின் கீழ் கல்லடி உப்போடையில் உள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக இராமகிருஸ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மகராஜ் அவர்களும் கல்லடி உப்போடை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சத்தியோசாத சிவஸ்ரீ அ.கு.லிகிதராஜ குருக்களும், பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் சிவபாதம் விஸ்ணுகுமார், சிறப்பு அதிதிகளாக கல்லடி பிரதேச கல்வி, கலை, கலாசார, மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத் தலைவர் ந.ஹரிதாஸ், கல்லடி உப்போடை ஸ்ரீசித்தி விநாயகர் பேச்சியம்மன் ஆலய பரிபாலனசபைத் தலைவர்
பொ.குணசீலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.


இந் நிகழ்வின் போது நாவலடி தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையுள்ள பாடசாலைமாணவர்களிடையே சுவாமி விவேகானந்தர் பற்றி நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டி, வினாடிவினாப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும், பரிசில் புத்தகங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சாதனையாளர் பாராட்டு விழாவில் 2021ம் ஆண்டு க.பொ.த (உ.த) விஞ்ஞான பிரிவில் அகில இலங்கையில் 1ம் இடத்தைப் பெற்ற புனித மிக்கல்கல்லூரில் கல்வி பயின்ற மாணவன் செல்வன். தமிழ்வாணன் துவாரகேசிற்கு விசேடமாக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அத்தோடு 2020, 2021ம் ஆண்டுதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கல்லடி பிரதேசத்தை சேர்ந்த 110 மாணவர்களும், 2020,2021ம் ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற 19 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இந்நிகழ்வின்போது க.பொ.த (உ.த) பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களுமாக மொத்தமாக 165 மாணவர்கள் நினைவுச் சின்னமும்
புத்தகப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், மாநகரமுதல்வர், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் தத்தம் அலுவலகங்களில்மேற்கொண்ட உயர் சாதனைகளுக்காக இதன்போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக
ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.இந் நிகழ்விற்கான பரிசில்களை அமரர் செல்வரெத்தினம் ஞாபகார்த்தமாக லண்டனில் வாழும் அவரது புதல்வர்கள் அன்பளிப்புச் செய்ததோடு, பிரதேசத்தில் பிறந்து புலம்பெயர்ந்து வாழும் சில நல்லுள்ளங்கள் சிலரும் பரிசில் பொருட்களை வழங்கி விழா சிறக்க உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: