- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நம்மை ஆட்சி செய்கின்றவர்கள். நம்மைப் பரிபாலனம் செய்கின்றவர்கள் யார் என்பதில் நாம் கடந்த காலங்களில் விட்ட தவறுகள்தான் நம்மை இப்பொழுது நடு வீதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மத்திய நிலையத்தில் வெள்ளிக்கிழமை 06.01.2023 இரவு இடம்பெற்ற மழலையர் பள்ளி ஒன்றிப்பு நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பெற்றோர்கள் பங்கேற்பாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.
புதிய காத்தான்குடி தெற்கு அஷ் ஷஹ்றா மழலையர் பாடசாலை புதிய காத்தான்குடி கிழக்கு அன்வர் நகர் மழலையர் பாடசாலை ஆகியவற்றின் ஒன்றிப்பு நிகழ்வு அவதானி வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கவிஞர் மதியன்பன் எம்.எஸ். அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான்
பெரியவர்கள் விட்ட கடந்த காலத் தவறுகள்தான்; இப்பொழுது இளையவர்களை நடுத்தெருவில் கலங்க வைத்துள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
உயர்மட்டமாக இருக்கலாம் கீழ் மட்டமாக இருக்கலாம் தேசிய மட்டமாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் பிழையானவர்களை, ஊழல்வாதிகளை, மோசடியானவர்களை ஒழுக்கம் கெட்டவர்களை அடுக்கடுக்காக குற்றச் செயல் புரிந்தவர்களை ஊக்குவிப்பவர்களின் கையில் நாம் இந்த நாட்டின் அதிகாரங்களைக் கொடுத்து விட்டதன் விளைவு முழு நாடுமே இப்பொழுது கண்ணீர் விடும் நிலைமக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.
ஆகையினால் எதிர்வரும் காலங்களில் கடந்த காலப் படிப்பினைகளை உள்வாங்கி ஊழலற்ற ஒழுக்கமுள்ள நல்லவர்களை வல்லவர்களை சிறந்தவர்களை தேர்வு செய்து பரிபாலனத்திற்குக் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் போதைப் பொருள் உட்பட பல்வேறு சமூக விரோதச் செயல்களுக்கு ஊக்குவிக்கப்படுகின்ற நிலைமையையும் இல்லாதொழிக்க வேண்டும் என்றார்.இந்நிகழ்வில் காத்தான்குடி ஆய்வுக்கும் மேம்பாட்டுக்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனீஸா பிர்தௌஸ் முன்னாள் நகர சபைத் தவிசாளர் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்; பெற்றோர் உட்பட இன்னும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
No comments: