News Just In

5/04/2022 06:45:00 AM

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ள இலங்கையின் முக்கிய சங்கம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் (04-05-2022) கேகாலை மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் தாம் கடமையாற்றும் வைத்தியசாலைகளுகு எதிரில் அல்லது அதற்கு அருகில் போராட்டங்களை நடத்தவுள்ளனர்.

இதேவேளை ஹம்பாந்தோட்டை, ஊவா, வடக்கு, மத்திய மாகாணங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் அடுத்தடுத்த தினங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் சேனால் பெர்னாண்டோ (Senal Fernando) கூறியுள்ளார்.

மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டால், நாட்டில் நிலவும் நெருடிக்கடி மேலும் உக்கிரமடையும் எனவும் இதன் காரணமாக இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறுவதை தவிர்க்க முடியாமல் போகும் எனவும் சேனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார துறையுடன் சம்பந்தப்படாத விடயங்கள் சம்பந்தமாக அன்றைய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தியதுடன், அடிக்கடி சேவை புறக்கணிப்புகளிலும் ஈடுபட்டது.

உதாரணமாக இலங்கை – சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராகவும் அப்போது பணிப்புறக்கணிப்புகளில் ஈடுபட்டது.

இருப்பினும், தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு, எரிபொருள், எரிவாயு, அத்தியவசிய உணவு தட்டுப்பாடுகள் தொடர்பாக இதுவரை வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த காலத்தில் மேற்கொண்டதை போன்ற வலுவான ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: