நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பல ஊகங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியாகியிருந்த போதிலும், பிரதமர் பதவி விலக மாட்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மற்றும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் ஆகியோர், பிரதமர் பதவி விலகப் போவதில்லை என்றும், அதற்கு நேர்மாறான தகவல்கள் அல்லது அறிக்கைகள் "தவறானவை" என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கொழும்பு ஆங்கில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ரொஹான் வெலிவிட்ட, நாடாளுமன்றத்தில் திட்டமிட்டு வெளியிடப்பட்ட அறிக்கை பதவி விலகுவது பற்றியது அல்ல என்று கூறினார். எக்காரணம் கொண்டும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலக மாட்டார்.
அவர் பதவி விலக எந்த காரணமும் இல்லை, அவர் அதை ஒருபோதும் செய்ய மாட்டார். சில ஊடகங்கள் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக பொய்யான தகவல்களை பரப்புகின்றன.
ஆனால் பிரதமருக்கு பதவி விலகும் எண்ணம் இல்லை என்றும் அவர் தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருப்பார் என்றும் நான் உறுதியளிக்கிறேன்” என வெலிவிட்ட தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி. காசிலிங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், பிரதமரின் ராஜினாமா குறித்த செய்திகள் சரிபார்க்கப்படாத வதந்திகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அண்மையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் தம்மை சுயாதீனமாக அறிவித்துக் கொண்ட குழுவினர், மகிந்த ராஜபக்ஷ இன்று பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.
அரசாங்கத்தின் "சுயேட்சையாளர்களின்" நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்தபடி, இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அமைச்சரவை இடைக்கால அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபையால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
அதன் பின்னர் பிரதமர் மற்றும் அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவே பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கருத்து தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரதமர் இடைக்கால அரசாங்கத்தையும் வழிநடத்த விரும்புகிறாரா என்று வினவியபோது, இடைக்கால அரசாங்கம் இருக்காது என்று பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
“இடைக்கால அரசாங்கத்தில் எந்த ஒரு கட்சியும் பதவிகளை ஏற்கவும் பாத்திரங்களை ஏற்கவும் தயாராக இல்லாத நிலையில் எப்படி இடைக்கால அரசாங்கம் அமையும்? இடைக்கால அரசு இல்லை. இதே அரசாங்கம் தொடரும், பிரதமர் மகிந்த ராஜபக்ச இப்போது இருப்பது போல் தொடர்வார்,'' என்றார்.
No comments: