News Just In

4/28/2022 06:08:00 AM

சிங்கள அரசியல் தலைமைகள் வகுத்துவருகின்ற திட்டத்தில் புலம்பெயர் மக்கள் விழுந்துவிடக்கூடாது : தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை

சிங்கள அரசியல் தலைமைகள் வகுத்துவருகின்ற திட்டத்தில் புலம்பெயர் மக்கள் விழுந்துவிடக்கூடாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிங்கள அரசியல் தலைமைகள் விரித்துள்ள வலைக்குள் புலம்பெயர் மக்களோ, வர்த்தகப் பெருந்தகைகளோ, முதலீட்டாளர்களோ சிக்கி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், உங்கள் உடன்பிறப்புக்களைக் கொன்றழிக்கச் செலவான சிறீலங்கா அரசின் கடனை ஈடுசெய்ய நீங்கள் முதலீடு செய்வதைப் புறக்கணித்து, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உங்கள் முதலீடுகள் நேரடியாக அம் மக்களைச் சென்றடைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதை எமது மக்கள் நன்கு அறிவீர்கள்.

சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் விரோத ஆட்சி முறையால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், இன்று நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் கிளர்ச்சியைச் சிங்கள தேசம் எதிர்நோக்கியுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்காகச் சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அறுபத்தொன்பது லட்சம் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றதாக மார்தட்டிய சிங்கள ஜனாதிபதியை, இன்று அதே மக்கள் வீட்டுக்கு போ என வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள்.

ஈழத் தமிழரை இனவழிப்புச் செய்த போரின் வெற்றி நாயகர்களாக இவர்களைக் கொண்டாடிய சிங்கள மக்களே இவ்வளவு விரைவாக அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

சிங்கள தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசமும், இந்தப் பொருளாதார நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஆயினும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணம், பல தசாப்தங்களாக எம்மீது நடாத்தப்பட்ட ஆக்கிரமிப்பு இனவழிப்பு யுத்தத்திற்காக உலக நாடுகள் எங்கும் வாங்கிக் குவித்த கடனே ஆகும்.

இக்கொடிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் வடுக்களைத் தாங்கி நிற்கும் எம்மிடமே அந்த யுத்தத்தினால் ஏற்பட்ட கடன் பளுவையும் சுமத்தும் சூழ்ச்சிகரத் திட்டத்தைச் சிங்கள அரசு வகுத்துவருகிறது.

புலம்பெயர் மக்களே! வர்த்தகப் பெருந்தகைகளே! முதலீட்டாளர்களே! இவர்கள் விரித்துள்ள வலைக்குள் சிக்கி நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம்.

உங்கள் உடன்பிறப்புக்களைக் கொன்றழிக்கச் செலவான சிறீலங்கா அரசின் கடனை ஈடுசெய்ய நீங்கள் முதலீடு செய்வதைப் புறக்கணித்து, வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உங்கள் முதலீடுகள் நேரடியாக அம் மக்களைச் சென்றடைய வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம்.

ஈழத் தமிழருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, இந்திய அரசின் அனுசரணையுடன் தொப்புள்கொடி உறவுகளாகிய தாய் தமிழகமும், தமிழக அரசும் முன்னெடுத்துள்ள பொருளாதார உதவித் திட்டங்களை நாம் நன்றியுணர்வோடு வரவேற்கின்றோம். இவ்வுதவிகள் உங்களையும் எம்மையும் பிரிக்கும் கடலைத் தாண்டி நேரடியாகவே எமது மண்ணில் இந்திய நடுவண் அரசின் உதவியுடன் கொண்டுவந்து சேர்ப்பதோடு, தமிழ் மக்களின் கைகளிலேயே நேரடியாகக் கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும்படி உரிமையுடன் உங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் இவ் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஈழத் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை இந்திய மத்திய அரசுக்குக் கொடுக்குமாறு உரிமையோடு வேண்டுகின்றோம்.

சிங்கள தேசத்தில் ஏற்படப்போகும் எந்த ஆட்சி மாற்றமும் ஈழத் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விமோசனத்தையும் தந்துவிடப் போவதில்லை.

எமது பட்டறிவில், இன்றுவரை ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த எல்லாச் சிங்கள அரசுகளுமே தமிழர்களைக் கொல்வதிலும், எமது உரிமைகளைப் பறிப்பதிலும், எமது நிலங்களை அபகரிப்பதிலும், எமது வளங்களைச் சுரண்டுவதிலும், தமிழரின் குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதிலும் போட்டி போட்டுத் தமது அதிகாரத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இனக் கலவரங்களை நடாத்தித் தமிழர்களை அழித்தவர்கள், இறுதியாகத் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் தரித்த, தமிழ் மக்கள் மீது போர் புரிந்து இனவழிப்பை நடாத்தியுள்ளார்கள். அதியுச்ச இனப்படுகொலை செய்த ஒருவரைத்தான் சிறீலங்கா மக்களும் அதிக வாக்களித்து நாட்டின் அதிபராக்கியிருந்தார்கள். சிங்கள மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குரிமை இன்றுவரை யார் மிகச் சிறந்த இனவாதியோ அவருக்குப் புள்ளடி போட்டு ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களாகிய நாம் ஒருபோதும் எமது பொருளாதார மீட்சிக்காகப் போராடவில்லை, மாறாக எமது வாழ்வுரிமை, இழந்த எமது இறைமை மற்றும் பறிபோன எமது நிலத்தை மீட்கவே போராடிக் கொண்டிருக்கின்றோம். சிங்களவர்களின் வரலாற்று வாழ்விடங்களின் ஒரு அங்குல நிலம்கூட எமக்கு வேண்டாம்.

நாம் 2009க்கு முன் யுத்த நெருக்கடிக்குள்ளும் சுதந்திர மனிதர்களாக, தன்னிறைவான தற்சார்புப் பொருளாதாரத்துடன், சிறப்பான தலைமைத்துவம் கொண்ட நடைமுறை அரசின் கீழ் வாழ்ந்துவந்தோம். இப் பொருளாதார நெருக்கடி எமக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. ஆயினும் தற்போது ஏற்படுள்ள நிலைமைகளைப் பயன்படுத்தி எமது மக்களையும், இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்திச் சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்றப் போராட்டங்களின் பகடைக்காய்களாகப் பயன்படுத்த விளைகின்றார்கள். இது தொடர்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் விழிப்புடன் செயல்படுமாறு அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம். இராஜபக்ச குடும்பத்தைச் சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றித் தண்டனை பெற வைப்பதனூடாக, இனிவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தமது சுயநல அரசியலுக்காக இனவாதத்தைத் தூண்டி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழிக்கும் நடைமுறையைக் கைவிடப் பண்ணவேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்.

அன்புக்குரிய எம் தாயக, புலம்பெயர் தமிழ் உறவுகளே!

ஒருபுறம் பகைவர் எம்மினத்தைக் அழித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கருத்து வேறுபாடுகளால் நாமே எம்மினத்தைச் சிறுகச் சிறுகச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

நாம் எமது இனத்தை நேசிப்பது உண்மையானால் எம்மினத்தின் விடுதலைக்காக உழைக்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படுவோம் வாருங்கள்!

தாயகத் தமிழ்த் தேசியக் கட்சிகளே! புலம்பெயர் அமைப்புக்களே! அரைகுறைத் தீர்வுகளுக்காக அவசியமான விடுதலையை விட்டுக் கொடுத்துவிட வேண்டாம்.

சமகாலப் பூகோள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் என்பன எமக்குச் சாதகமாகக் கனிந்து வருகின்ற சூழ்நிலையைக் கச்சிதமாக நாம் கையாளவேண்டிய கடப்பாடு உங்கள் எல்லோருக்கும் உள்ளது.

ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்படாத எந்த அரைகுறைத் தீர்வுகளுக்கும் மக்கள் ஆணையை மீறி ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் உங்களில் எவருக்கும் கிடையாது என்பதைப் புரிந்து செயற்படுங்கள். அன்பார்ந்த சிங்கள உறவுகளே! நாம் சிங்கள மக்களுக்கு விரோதிகள் அல்லர், எமது தமிழீழ விடுதலைப் போராட்டமும் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல, இலங்கை பிரித்தானியக் குடியேற்றவாதிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற பின், கடந்த 74 ஆண்டுகளாக எம்மை ஆண்டு வரும் சிங்கள இனவாத அரசியல்வாதிகள் பாராளுமன்ற ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகக் கையிலெடுத்த இன அடக்குமுறைக் கொள்கையே நாம் பிளவுபட்டிருப்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

ஆயுத பலத்தினால் எமது மக்களை அடிமை கொள்ள முனையும் சிங்கள அரசுக்கும், அரசுப் படைகளுக்கும் எதிராகவே நாம் தற்காப்புப் போர் புரிய நிர்ப்பந்திக்கப்பட்டோம். இந்தத் தேவையற்ற போர் தமிழ் மக்களை மட்டுமன்றி சிங்கள மக்களையும் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பதை இப்போதுதான் நீங்கள் உணரத் தொடங்கியுள்ளீர்கள்.

இனவெறி கொண்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைக் கொள்கையால் இலட்சக் கணக்கான தமிழர்கள் மட்டுமல்ல ,கடந்த 51 வருடங்களில், இந்த அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்த பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்தோடு இந்த அதிகார வர்க்கத்தைப் பாதுகாக்க இராணுவத்தில் இணைந்த அப்பாவிச் சிங்கள இளைஞர்களும் அநியாயமாகப் பலியிடப்பட்டிருக்கிறார்கள்.

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது போர்தொடுத்து இனவழிப்பு நடாத்தியதும் இதே இனவாத அரசியல்வாதிகளே, சமீபத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடாத்தி இஸ்லாமிய நண்பர்களுடன் விரோதத்தை ஏற்படுத்த முனைந்தவர்களும் இதே அரசியல்வாதிகள் தான். இன, மத, சாதி பேதங்களால் எம்மைக் குத்திக் குதறி அழியச் செய்துகொண்டிருப்பவர்களும் இவர்களே தான். இப் போரினால் ஏற்பட்ட பொருளாதாரப் பளுவைச் சிங்கள மக்களும் சுமக்க வேண்டிவரும் என்பது இப்போதுதான் உங்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ளது.

நேற்றுவரை எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அதியுச்ச அடக்குமுறைகளை இப்போது உங்கள் மீதும் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளார்கள். இத்தனை காலமும் நீங்கள் இனவாத அரசியல்வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றப் போட்டுவந்த இனவாதச் சூழ்ச்சி வலைக்குள் அகப்பட்டு ஏமாந்தது போதும். தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் இனவாதிகளை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தி, சிறீலங்காவில் வாழும் பல்லின மக்களையும் சமத்துவமாக ஆளக்கூடிய யதார்த்தவாதிகளின் கைகளில் நாட்டை ஒப்படையுங்கள்.

இப்போது அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்கிறீர்கள் அல்லவா? ஆனால் இவ்வளவு காலமும் இவர்கள் கொன்று குவித்த தமிழ் மக்களின் உயிர்களுக்கு யார் பொறுப்புக்கூறுவது? அவசியமற்ற யுத்தத்திற்காகப் பறிகொடுத்த சிங்கள இராணுவச் சகோதர்களின் உயிர்களை யார் மீளத் தரப்போவது?

இவர்களை எம்மிடம் கொள்ளையடித்த ஒவ்வொரு சதத்தையும், இன்று எமது நாட்டுக்கு இருக்கும் எல்லாக் கடன்களையும் அடைத்துவிட்டுச் சரணடையச் சொல்லுங்கள்.

இவர்களைச் சிறையிலிட்டு தக்க தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் நீங்களும் இந்த இனவாதச் சகதிக்குள் இன்னும் மூழ்கிக் கிடப்பதாகவே நாம் கருத நேரிடும்.

எனவே எம்மிடையே உள்ள இன முரண்பாட்டுக்கு முடிவுகட்டி நிரந்தர சமாதானத்தைத் தோற்றுவிக்க வேண்டுமானால், இனவெறிபிடித்த ராஐபக்ச குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பினால் மட்டும் போதாது. இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கான மூல காரணங்களை ஆராய்ந்து பொருத்தமான தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கைத் தீவில் ஒளிமயமான எதிர்காலம் தோற்றுவிக்கப்பட வேண்டுமானால், சிங்கள மக்கள் மனங்களில் பரிபூரண மாற்றம் மிக அவசியமானது.

அன்பான சிங்களச் சகோதர இன மக்களே! நீங்கள் உங்கள் பாரம்பரியப் பிரதேசத்தில் உங்கள் அரசியல்த் தலைவிதியை நீங்களே தீர்மானிப்பது போல், ஈழத் தமிழர்களும் அவர்களது மரபுவழித் தாயக பூமியில் விடுதலை பெற்ற இனமாகத் தங்கள் அரசியல்த் தலைவிதியைத் தாங்களே தீர்மானித்தவாறு வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களில் மேலோங்க வேண்டும்.

அவ்வாறான எண்ணங்கொண்ட ஒரு புதிய தலைமையைத் தோற்றுவித்தால் மட்டுமே நாங்களும் நீங்களும் இலங்கைத் தீவில் நிம்மதியாக வாழமுடியும்.

சர்வதேச சமூகமே! 2009 மே வரை எங்களுடைய நியாயமான விடுதலைப் போராட்டத்திற்கு, பயங்கரவாத முத்திரை குத்தி, நீங்கள் கொடுத்த பெருந்தொகை நிதியை மூலாதாரமாகப் பாவித்து ஈழத்தமிழர்களை இனவழிப்புச் செய்தார்கள். போரை முடிவுக்கு கொண்டுவர உதவினால் இலங்கையைச் சொர்க்கபுரியாக மாற்றுவோமென உங்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிய சிறீலங்கா அரசு இன்றுவரை தொடர்ச்சியாக உங்களை ஏமாற்றியே வருகிறது.

போர் முடிவற்று 13 வருடங்களை நெருங்கியும், இன்றுவரை இனப் பிரச்சனைக்கான எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை. 2009க்குப் பின் நாட்டின் அபிவிருத்திக்காக உதவி வழங்கும் நாடுகளால் பாரியளவு நிதி கொடுக்கப்பட்டிருந்தும், அந்த நிதி நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படாது, அவசியமற்ற பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன் படுத்தப்பட்ட காரணத்தால், இன்று தனது நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத பொருளாதார நெருக்கடி நிலை சிறீலங்காவில் ஏற்பட்டுள்ளது. சிறீலங்காவின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலை குறித்து அனைத்துலக சமூகம் பூரண விசாரணைகளை நடாத்துவது அவசியமானதாகும்.

அதேவேளையில் தமிழர்களாகிய நாங்கள், உதவி வழங்கும் நாடுகளிடமும், சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்துவது என்னவென்றால், உங்களது இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதேயளவு முக்கியத்துவம் ஈழத் தமிழர்களுக்கான ஒரு நிரந்தர அரசியற் தீர்வு விடயத்திலும் கொடுக்கப்பட வேண்டுமெனத் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாடு நிரந்தரமாக இப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமெனில், ஈழத் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சனை உலகம் ஏற்றுக்கொண்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கைளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: