"விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா பழைய மாணவர் சங்கத்தின் நல்லிணக்க விளையாட்டு விழா கல்லூரியின் அதிபரும் விவேகா பழைய மாணவர் சங்கத்தின் தலைவியுமான திருமதி.ந.தர்மசீலன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்றிணைத்து பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீகவளம்சார் அபிவிருத்திகளை மேம்படுத்தும் நோக்கில் நடாத்தப்பட்ட நல்லிணக்க விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செ. புண்ணியமூர்த்தி கலந்து நிகழ்வில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் பெறியியலாளர் திருமதி சி. லிங்கேஸ்வரன் கலந்து சிறப்பித்திருந்தார்.
குறித்த நல்லிணக்க விளையாட்டு விழாவின் முதல் நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து பாடசாலைக் கொடியேற்றப்பட்டு, கல்லூரியின் அதிபரினால் தலைமையுரையும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் திருமதி. பிரமிளா சசிகுமாரனின் உரையினை தொடர்ந்து பழைய மாணவர்களின் கலந்துரையாடல், புதிய உறுப்பினர்களை பதிவு செய்தல், வலைப்பந்தாட்ட குழு பிரித்தல், சிறு விளையாட்டுக்கள், அஞ்சல் வகை விளையாட்டுக்கள், சமூக நல்லிணக்க விளையாட்டுக்கள், பொது அறிவுப் போட்டி என்பன இடம்பெற்றிருந்தன.
இறுதியாக பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் உரையினையடுத்து, அதிதிகளுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுடன் நிகழ்வு நிறைவடைந்திருந்தது.
இந்நிகழ்வில் விவேகா பழைய மாணவர் சங்கத்தின் உபதலைவி திருமதி.திலகவதி ஹரிதாஸ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட மேலும் பல பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
குறித்த பாடசாலையின் விவேகா பழைய மாணவர் சங்கமானது கடந்த காலங்களில் மிகவும் நலிவுற்ற நிலையில் இயங்கி வந்ததோடு, கல்வி கற்கும் மாணவர் சார்ந்த கல்வி விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தாமையால் பெரும் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தமையினால் விவேகா பழைய மாணவர் சங்கத்தை மீண்டும் புத்துயிர் ஊட்டும் நோக்கோடு இதன் முதற்கட்டமாக உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற கல்லூரியின் ஆண், பெண் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு அங்கமாக பழைய மாணவர் சங்க உறுப்புரிமையை பெறும் ஒரு நிகழ்வாகவே இந்த நல்லிணக்க விளையாட்டு விழாவினை பழைய மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: