Jana Ezhil
வாகரை – புளியங்கண்டலடி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா இன்று (31) வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் புளியங்கண்டலடி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாக சபையினரால் கௌரவிக்கப்பட்டார்.பழம்பெரும் பெருமைகளைக் கொண்ட இவ் ஆலயமானது புணருத்தனம் செய்யப்பட்டதனை தொடர்ந்து கடந்த
28 ஆம் திகதி ஆரம்பமான மஹா கும்பாபிசேக நிகழ்வுகள் மட்டக்களப்பு ஸ்ரீ ஆணைபந்தி சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் பிரம்மா ஸ்ரீ பிரபா தலைமையில் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் கடந்த செவ்வாய்கிழமை எண்ணெய்க்காப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் மங்கள இசை முழங்க பக்தர்களின் அரோஹரா கோஷத்துடன் பிரதான கும்பங்கள் எடுத்து வரப்பட்டன. அதனைத் தொடர்ந்து மூல விக்கிரகத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழாவின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலப்பகுதியில் மேற்படி ஆலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கு என தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக ஒதுக்கீடுகளை செய்திருந்தமை, புளியங்கண்டலடி கிராமத்தில் உள்ள வீதிகளை அபிவிருத்தி செய்தமை மற்றும் சார்லஸ் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கியமை உட்பட சுமார் 5 மில்லியன் ரூபாய்கள் வரையிலான அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள் ஆலய நிர்வாக சபையினரால் கௌரவிக்கப்பட்டார்.
இதன்போது கோரளைப் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான நல்லரெட்ணம், கமலநேசன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாகரை பிரதேச இணைப்பாளர் அலெக்ஸ் நீரோஷன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: