News Just In

1/04/2022 07:53:00 PM

அத்தியாவசிய உணவுப் பொருட்களையாவது கட்டுப்பாட்டு விலையில் பேணி மக்களை பட்டினிச் சாவில் இருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அத்தியாவசிய உணவுப் பொருட்களையாவது கட்டுப்பாட்டு விலையில் பேணி மக்களை பட்டினிச் சாவில் இருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் இன்று(4) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்: முக்கிய பொருட்களுக்கான விலைகளை அரசாங்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் சங்கிலித்தொடரான விலையேற்றத்துக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். இதன் காரணமாக நாளாந்த வாழ்க்கைச் செலவு பல மடங்காக அதிகரித்திருக்கின்றது. எனினும் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்கள் நிவாரணங்கள் எதுவும் இன்றி உயிர் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில் விலையேற்றம் ஒருபக்கம், பொருட்களுக்கான தட்டுப்பாடு ஒருபக்கமென மக்கள் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகி வருகி;றார்கள்.

வருமானங்களில் எவ்வித அதிகரிப்பும் இல்லாத நிலையில் அனைத்து பொருட்களுக்குமான விலை நாளாந்தம் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கற்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுவர்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாவதால் நாட்டின் எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமற்ற நலிவடைந்த சமுதாயமாக மாற்றமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் விலையேற்றம் பட்டினிச் சாவு போசாக்கின்மை போன்றவற்றை ஏற்படுத்தும் அதே நேரம் கொலை கொள்ளை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் காரணமாக அமையும்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியை அப்பாவி மக்களின்மீது திணிப்பது பொருத்தமற்ற செயற்பாடாகும் அத்துடன் விலையேற்றம் எப்போதும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாகாது இதற்கான மாற்றுவழியாக அரசு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கும் அதேவேளை அரிசி, பருப்பு, மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களினுடைய விலையினையாவது மிகக்குறைந்த கட்டுப்பாட்டு விலையில் பேணி பட்டினிச் சாவிலிருந்து எமது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த விலையேற்றம் அப்பாவி ஏழை மக்களைத்தவிர அரசியல் கதிரைகளில் இருக்கின்றவர்களை இன்னமும் பாதிக்காத காரணத்தால் அதன் தாற்பரியத்தை அரசினால் இன்னமும் உணர்ந்துகொள்ள முடிவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எப்.முபாரக் 

No comments: