News Just In

12/09/2021 07:47:00 PM

இலங்கையில் இடம்பெறும் ஊழல்களை சுட்டிக்காட்டும் முகமாக புதிய இணையதளமொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் இடம்பெறும் ஊழலுக்கெதிராக எதிராக எழுச்சி பெறுமாறு பொது, தனியார் மற்றும் குடிசார் சமூகத்திற்கு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா (transparency international sri lanka) நிறுவனம் 2021 ஆம் ஆண்டின் ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு அப்பேசல்லி டொட் எல்கே (apesalli.lk) எனும் இணையத்தளத்தினை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

2021 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் இலங்கையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையும் நிலவுகின்ற இந்த இக்கட்டான தொற்றுப்பரவல் காலப்பகுதியில் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இயன்றளவு கொண்டு நாடாத்த முயல்கின்றனர். இவ்வேளையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் ஏராளமாக அதிகரித்துள்ளமை, குறித்த நிறுவனத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை பின்னணியாகக் கொண்டு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனமானது ஊழலுக்கெதிரான சர்வதேச தினமான டிசம்பர் 09 இன்றைய தினத்தில் இந்த இணையத்தளத்தை வெளியிட்டுள்ளது.

இது ஊழலுக்கெதிரான சமூக செயற்பாட்டிற்கான பொதுமக்களின் தளம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் சரிபார்த்து உறுதி செய்ததைத் தொடர்ந்து முறைப்பாட்டினை மேற்கொண்டவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் ஆலோசனைகளை வழங்கவுள்ளது.

இதன்மூலம் அன்றாட வாழ்வில் ஊழலுடன் தொடர்புடைய சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவ்வாறான சம்பவங்களை அவதானித்தவர்கள் தங்களது அனுபவத்தினை இத்தளத்தினூடாக பொதுவில் விவாதிப்பதற்கான சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.

ஊழலுக்கெதிரான சர்வதேச தினத்தினை அடையாளப்படுத்தும் வகையில், இலங்கையில் நடைபெறும் ஊழல் சம்பவங்களுக்கு எதிராக எழுச்சி பெறுமாறு பொது, தனியார் மற்றும் சமூக அங்கத்தவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா தெரிவித்துள்ளது.

No comments: