News Just In

9/03/2021 06:14:00 PM

அரசினால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தையும் எதிர்ப்பதல்ல எதிர்க்கட்சி- பூ.பிரசாந்தன் தெரிவிப்பு...!!


அரசினால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தையும் எதிர்ப்பதல்ல எதிர்க்கட்சி, சில சில மாற்றங்களை செயற்படுத்த வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக திட்டங்களையும் எதிர்ப்பதென்பது மிக மோசமான சூழலை உருவாக்குமென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் , முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் இன்று மட்டக்களப்பில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் இல்லை இலங்கையில் எதிர்க்கட்சி அரசியல் என்பது மிகமிக மோசமான ஒரு கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த ஆட்சியை எவ்வாறு கைப்பற்றலாம் என்று அதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மகா போகத்தின் போது பெரும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு விவசாயிகளை வைத்து ஊடகங்களுக்கு காரசாரமான ஊடக அறிக்கைகளை மாத்திரம் விட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இம்முறை விளைச்சல் வீழ்ச்சியடைய போகின்றது நாட்டில் பஞ்சம் ஏற்படப்போகின்றது, என்று அறிக்கைகளை மாத்திரம் விட்டார்கள், அந்த வேளையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மிகத்தெளிவாகச் சொன்னார் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்று அதன் அடிப்படையில் நீங்கள் பார்த்தால் தெரியும் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்தி தொன்ணுறு ஆயிரம் ஏக்கர்கள் வயல்கள் விளைச்சல் பண்ணப்பட்டு அதில் இம்முறை விளைச்சல் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

கிரான் பிரதேசத்தில் ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 60 மூடைகள் விளைந்திருக்கின்றது. அதே பேன்று சேதமடைந்த வயல்கள் மிக மிக குறைவாகவே உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 தொடக்கம் 30 மூடைகள்தான் ஒரு ஏக்கருக்கு விளைச்சல்கள் சராசரியாக கிடைக்கப்பெற்று வந்தன. ஆனால் இம்முறை அதிகமான விளைச்சல் கிடைத்திருக்கின்றது. இவர்கள் தங்களது அரசியலுக்காக செய்த போலிப் பிரச்சாரங்களாகவே வெளிப்படையாகி இருக்கின்றது. இம்முறை விளைச்சல அதிகரித்து இருக்கின்றது. இதனால் மக்கள் தெளிவடைய வேண்டும்.

அரசினால் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தையும் எதிர்ப்பதல்ல எதிர்க்கட்சி, நஞ்சற்ற உணவினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் எனும் திட்டத்தை அரசு கொண்டுவந்திருந்தது அதனடிப்படையில் இன்று விளைச்சல் அதிகரித்து இருக்கின்றது. சில சில மாற்றங்களை செயற்படுத்த வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக திட்டங்களை எதிர்ப்பதென்பது மிக மோசமான சூழலை உருவாக்கும்.

இந்த கொரோனா தொற்று காலத்தில் நாடு பற்றியெரிகின்ற போது சிறுபிள்ளைத்தனமாக போலி கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறி மக்களை குழப்பி திசைதிருப்பி அன்றாடம் சூழலை குழப்புவதற்கு எந்த அரசியல் தலைமைகளும் முனையக் கூடாது. அதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை இதில் கட்சி பேதங்களை மறந்து மக்களுக்காக செயற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்பதே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது.

கடந்த நல்லாட்சி அரசினைக் கொண்டுவருகின்ற போது மக்களுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதனோடு இணைந்த கட்சிகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், யுத்த இழப்புக்கள் தொடர்பாகவும் பல்வேறு தங்களது கருத்துக்களை முன்வைத்து வெவ்வேறு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதாக அந்த ஆட்சியினை அமைத்தார்கள் குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்து நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்ததே இன்று மாறி மாறி இந்த கருத்துக்களை தெரிவிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான் முட்டுக்கொடுத்து அந்த அரசை பாதுகாத்தார்கள்.

ஆகவே அவர்களது காலத்தில் எதுவும் செய்யாமல் மக்களை நடுத்தெரிவில் விட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. அவ்வாறு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு. இன்று ஆட்சி மாற்றத்தின் பின்பு அவர்களால் எதுவும் செய்ய முடியாதவர்கள் அதே கோசத்தை தூக்கிக்கொண்டு வந்திருக்கின்றார்கள்.

நல்லாட்சி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றது என்பதனால் தான் உண்மையில் இந்த கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி மற்றும் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் இணைந்து செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

அந்த அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் தமிழர்களின் எதிர்கால அபிவிருத்தி பொருளாதாரம் என்பவற்றுடன் கௌரவத்துடன் எவ்வாறு வாழ வேண்டும் என்பது தொடர்பாக எமது கட்சியின் தலைவர் அரசுடன் இன்றும் பேசிக்கொண்டு இருக்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற வகையில் போலியான பல பதுக்கல்கள் நடைபெறுகின்றது அது அனைவருக்கும் தெரியும் இலங்கையிலும் பல இடங்களிலும் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. அந்த அடிப்படையில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பையும், பொருட்களை அரசு வழங்குவதிலும் அரசு முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இலங்கையிலும் குறிப்பாக அரிசி, சீனி, நெல் போன்றவற்றிற்கு தட்டுப்பாடு இருக்கின்றது இன்னும் குறுகிய காலத்தில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படப்போகின்றது மக்கள் அன்றாட உணவிற்கு கஸ்டப்படப்போகின்றார்கள் என்ற மாயையை உருவாக்கி அரசியல் செய்வதற்கான ஒரு தந்திரோபாயமாக எதிர்கட்சி அரசியல் செய்வதற்கான ஒரு தந்திரோபாயமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தும் செயற்பாடாக அரசினால் பல்வேறுபட்ட செயற்பாடுகள் முன்னெடுத்துவருகின்றன.

அதன் அடிப்படையில்தான் பிடிபட்டிருக்கின்ற நெல் அதேபோன்று சீனி, அரிசி என்பவற்றை பிடிப்பதற்கான நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்றது, குறிப்பாக விவசாயிகள் அடுத்த போகத்திற்கான விதை நெல்களை வைத்துக்கொண்டு இருக்கின்ற விவசாயிகள் அல்லது தாங்கள் உற்பத்தி செய்த விளைச்சல்களை வைத்திருப்பதற்கு எந்தத்தடையும் இல்லை. அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படுமாயின் உரிய ஆதாரங்களை காண்பித்து அவர்களது விதை நெல்களை வைத்துக்கொள்ள முடியும்.

பொருட்களை பதுக்கி வைத்திருக்கின்ற இடைத்தரகர்களையே கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கான அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மில் உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக யூன் மாதம் 30 ஆந் திகதிய வர்த்தமானியின் அடிப்படையில் பதிவு செய்யலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 125 இற்கும் மேற்பட்ட மில்கள் இருக்கின்ற போதிலும் 3 மில் உரிமையாளர்களே பதிவு செய்துள்ள நிலை காணப்படுகின்றது. ஏனையவர்களும் பதிவு செய்துகொள்வதன் ஊடாக நாட்டில் எவ்வளவு நெல் இருக்கின்றது என்று அரசாங்கம் அறிந்துகொண்டு அதனடிப்படையில் மேலதிகமாக இறுக்குமதி செய்வதா அல்லது இருப்பதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதனை தீர்மானிக்க முடியும். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகம் ஊடாக அனைவரும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

No comments: