News Just In

9/03/2021 06:21:00 PM

மாபியாக்களிடமிருந்து மீட்டு பொதுமக்களுக்கு வழங்கும் செயற்பாட்டையே அரசு மேற்கொள்கின்றது- இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!


(மட்டக்களப்பு விசேட நிருபர்)
நெல்,சீனி,மா போன்றவற்றினை பதுக்கிவைத்து கொள்ளை இலாபம் தேடநினைக்கும் மாபியாக்களிடமிருந்து அவற்றினை மீட்டு பொதுமக்களிடம் வழங்கும் செயற்பாடானது மக்களின் நன்மை கருதியே மேற்கொள்ளப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிட்சையளிக்கப்பட்டுவரும் நோயாளிகளுக்காக பயன்படுத்துவதற்கான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (03) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பிலும் வைத்தியசாலை நிருவாகத்துடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மருத்துவ உபகரண தொகுதியையும் வழங்கி வைத்துள்ளார்.

இதன்போது அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் மூலம் பொதுமக்களின் நன்மை கருதியே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது ஜனாதிபதியினதோ அரசாங்கத்தினதோ நன்மை கருதி எடுக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

பதுக்கிவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொன் சீனி, அரிசி போன்ற பொருட்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டு கஸ்டப்படும் ஏழை மக்களுக்கு சலுகை விலையில் வழங்கப்படுவதாகவும்,

இந்த நாட்டில் மாபியாக்கள் விலைகளை தீர்மானிக்கும் நிலையினை மாற்றும் செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.







No comments: