“அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையும் நீதியும் வேண்டும், அடக்குமுறை வேண்டாம், மூதாதையர்கள் பயணம் செய்த போக்குவரத்துப் பாதை எமக்கும் வேண்டும்.” என்ற கோஷத்தோடு மன்னாரில் இருந்து வில்பத்து ஊடாக புத்தளம் செல்கின்ற புத்தளம் – மறிச்சுக்கட்டி பி-379 வீதியை உடனடியாகத் திறக்கக் கோரும் கையெழுத்துப் போராட்டம் வெள்ளிக்கிழை 23.01.2026 இடம்பெறவுள்ளதாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த வீதி பல நூற்றாண்டுகளாக மக்கள் பாவனையில் இருந்த “பழைய மன்னார் வீதி” யாகும்.
இந்த வீதி யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு மூடப்பட்டு 2010ல் மீண்டும் திறக்கப்பட்டது. 2018 வரை மக்கள் போக்குவரத்திற்காக இந்த வீதியைப் பயன்படுத்தி வந்தனர். அவ்வேளையில் அரச பேருந்துச் சேவையுடன் கூடிய தனியார் போக்கு வரத்துச் சேவையும் சுமுகமாக இடம்பெற்று வந்தது.
இந்தப் பாதை திறப்புக் கொரிக்கை தொடர்பாக புத்தளம் மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1938-இல் வில்பத்து தேசியப் பூங்கா உருவாவதற்கு முன்னதாக, இது வடமேற்கு மற்றும் வட மாகாணங்களை இணைக்கும் பிரதான நிருவாக எல்லையாக இருந்து வந்துள்ளது.
1980களுக்கு முந்தைய அரச பேருந்து போக்குவரத்து அட்டவணைகளில் இது வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கிகரிக்கப்பட்ட பொது வீதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு போதும் வனத்தை அழித்து உருவாக்கப்பட்ட அத்துமீறல் பாதையல்;ல, மாறாக வனமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக பல நூற்றாண்டு காலம் பாவனையில் இருந்து வந்த சட்ட பூர்வமான போக்குவரத்துப் பாதையாகும்.
இந்த வீதியை மீண்டும் திறப்பது சமூக, பொருளாதார மறுமலர்ச்சிக்கு உதவும்.
இப்பாதை திறக்கப்பட்டால் தற்சமயம் சுற்றுப் பாதை வழியாகப் பயணம் செய்ய வேண்டிய 140 கிலோமீற்றர் பயணத் தூரம் 80 கிலோமீற்றராகக் குறையும். இதன் மூலம் நேர வீண் விரயம், பண வீண் விரயம், வீண் அலைச்சல், விபத்தக்கள், போக்குவரத்து நெருக்கடி என்பன குறையும்.
இலங்கையின் ஏனைய தேசியப் பூங்காக்கள் ஊடாகப் பொதுப் போக்குவரத்து தங்கு தடையின்றி இடம்பெற அனுமதிக்கும்போது வில்பத்துவில் மட்டும் தடை விதிப்பது ஏன்?
இந்தத் தடை என்பது வடபகுதி மக்கள் மீது காட்டப்படும் ஒரு பிராந்தியப் பாகுபாடும் ஓர வஞ்சனையுமாகும்.
இந்தப் பாதை தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கள் சூழல் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டுள்ள அதேநேரம், ஏற்கெனவே வர்த்தமானிப்;படுத்தப்பட்டுள்ள இந்த வீதியைப் பராமரிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டத் தடை விதிக்கவில்லை.
எமது போராட்டம் இயற்கைக்கு எதிரானதல்ல, மாறாக எமது பூர்வீக, சட்டபூர்வமான மனிதாபிமான போக்குவரத்து உரிமையை மீட்பதற்கானதேயாகும்.
எனவே, இது விடயத்தில் அரசாங்கம் உடனடியாக மௌனம் கலைத்;து, இந்த வீதியைத் திறந்து வைத்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் அனைத்தின மக்களும் இணைந்து கொள்ளவுள்ளார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments: