News Just In

8/22/2021 08:58:00 AM

ஊரடங்கை மீறிச் செயற்படுவோருக்கு எச்சரிக்கை...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலான 10 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை பொதுமக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கடுமையான அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியதால் நாட்டின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, கிரான் ஆகிய பிரதேசங்கள் முடங்கிக் காணப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில அத்தியாவசிய சேவைகள், விவசாய நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறிய வகையில் வீதிகளில் செயற்படுவோரைக் கண்டறியும் வகையில் வாழைச்சேனை பொலிஸாரினால் இன்று சனிக்கிழமை முதல் பிரதான வீதிகளில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறிச் செயற்பட முற்பட்ட சிலர் பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள அனைத்து வீதிகளிலும் பொலிஸார் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறுவோரைக் கண்டறியும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
















No comments: