சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அமைப்பின் பணிப்பாளர் சுதேஷ் நந்திமால்.
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் மூடப்பட்டு அவை அனைத்தும் சீர் கல்வியைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களாகத் திகழ வேண்டுமென சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு என்ற அமைப்பின் பணிப்பாளர் சுதேஷ் நந்திமால் தெரிவித்தார்.
சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றிய விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு என்ற அமைப்பினரின் முதலாவது வெளி மாவட்ட அமர்வு மட்டக்களப்பு சர்வோதய மாவட்ட வள நிலையத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் சிறைக் கைதிகளின் உரிமைகள், தேவைகள், சிறைச்சாலைகளில் உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தும் உணர்திறன் மற்றும் பரிந்துரைப்பு விழிப்புணர்வு அமர்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் சுதேஷ் நந்திமால், நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் சர்வதேச தராதரங்களில் இல்லை.
குறைந்தபட்சம் சிறைக்கதிகளின் வாக்களிக்கும் உரிமையையாவது நாம் அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இலங்கையில் சிறைவாழ்க்கை என்பது மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
எனவே, எந்தவொரு சிறைக்கைதியும் அவருக்குள்ள மனித உரிமை மீறலுக்கு உள்ளாகலாகாது. எனவே, சிறைக்கைதிகள் சிறை வாழ்க்கையில் அனுபவிக்கும் சித்திரவதைகளையும் மனித உரிமை மீறல்களையும் முடிவுக்குக் கொண்டுவரக் கூடிய மனிதாபிமானச் செயற்பாடுகளை சிறைக்கு வெளியே உள்ள அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.
அதற்காகவே, நாம் இவ்வாறு நாடு தழுவிய விழிப்புணர்வூட்டும் செய்றபாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். தற்போதைக்கு இலங்கைச் சிறைகளில் நிலவும் நிலைமைகள் மனித உரிமைகளைப் பேணியதாக இல்லை. எனவே. அந்த நிலைமைகளை மேம்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் நாட்டிலுள்ள எவரும் சிறை செல்லாத சீர் திருந்திய சமூக வாழ்வு உருவாக வேண்டும். சிறைச்சாலைகள் கல்விக் கூடங்களாக உருவாக்கப்ட வேண்டும்.
சிறைக் கைதிகளின் நிலைமை தொடர்பாக அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதில் சிறைக்கு வெளியே உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக அமைப்பினர், புத்திஜீவிகள், மாற்றுச் சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரின் நிபுணத்துவமும் குரலும் மிக மிக அவசியம். அது மனித உரிமைகளை மேம்படுத்தவதற்கும் நாட்டை வளமாக்குவதற்கும் ஆக்கபூர்வமான அபிவிருத்திக்கும் பங்களிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
இந்நிகழ்வில் சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு என்ற அமைப்பின் முகாமையாளர் ரசிக்க குணவர்த்தன, திட்ட அதிகாரி ரீ. ஷாமினி, ஊடக இணைப்பாளர் கலும் விஜேசிங்க, நிதி முகாமையாளர் திலினி பாக்யா உள்ளிட்ட இன்னும் பலர் கலந்து கொண்டனர்
No comments: