News Just In

8/22/2021 08:48:00 AM

மீண்டும் வழமைக்கு திரும்பிய பனங்காடு பிரதேச வைத்தியசாலை- செயல்வீரனாக தன்னை நிரூபித்த டாக்டர் சுகுணன்...!!


(நூருல் ஹுதா உமர்)
இன்று பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன் அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழு, கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் அனைவரையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு அனைவரின் சம்மதத்துடன் பொலிஸாரின் 24 மணிநேர பாதுகாப்புடன் வைத்தியசாலையை இன்றிலிருந்து பொதுமக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்குவதற்காக மீண்டும் தொழிற்பட வைத்தோம்.

இந்தத் தருணத்தில் இதற்காக ஒத்துழைப்பை தந்த இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அபிவிருத்தி குழுவிற்கும் கிராம பிரமுகர்களுக்கும் முக்கியமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும்,

நான்கு தினங்களுக்கு முன் பனங்காடு வைத்தியசாலைக்கு நோயாளியைக் கூட்டி வந்த மதம்பிடித்த மனிதர் ஒருவர் வைத்திய அதிகாரியையும் உத்தியோகத்தர்களையும் தாக்கியதுடன் ஆவணங்களை கிழித்தெறிந்து அரச உடைமைகளை சேதப்படுத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு உத்தியோகத்தர்கள் அனைவரும் கடமைக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்து பொதுமக்களுக்கு பாரிய இடர்பாடு ஏற்பட்டிருந்தது.

பலமுறை தொலைபேசி மூலம் என்னை அழைத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான், முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட இன்னும் பலருக்கும் நீங்கள் கேட்டுக்கொண்ட பிரச்சினையை முடித்து விட்டேன் என்ற தகவலையும் தெரியப்படுத்துகிறேன்.

வளத்தில் ஆரம்ப சுகாதார பிரிவாக காணப்பட்ட இந்த வைத்தியசாலையை பிரதேச வைத்தியசாலையாக மாற்றி பற்சிகிச்சைப்பிரிவு, நவீன வைத்திய ஆய்வுகூடம் அத்துடன் இருமாடி கட்டிடத்தொகுதி என்பவற்றை ஏற்படுத்தி கொடுத்ததுடன் அந்த கட்டிடத்தொகுதிக்கு தேவைப்பட்ட மேலும் ஐந்து மில்லியன் ரூபாவை இன்று ஒதுக்கீடு செய்ததுடன் மகிழ்ச்சியுடன் அந்த ஏதுமறியா மக்களுடன் அளவளாவி விடைபெற்றேன்."எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்று பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணனை நேரில் சந்தித்து அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலை தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: