(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
சன சமூக நிலையங்கள் கொந்தராத்துக்களை மட்டும் செய்யும் அமைப்புக்கள் என்ற பார்வையை நீக்கி அது ஒட்டு மொத்த சமூக முன்னேற்றத்துக்கான அடித்தளம் என்பது ஏறாவூரில் நிரூபிக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பதில் ஆணையாளருமான ஏ. எல். எம். அஸ்மி தெரிவித்தார்.
ஏறாவூர் 3ஏ சன சமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழா நிகழ்வொன்றில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தின் தலைவரும் மாவட்டச் செயலக தலைமையகப் புள்ளி விவரவியல் உத்தியோகத்தருமான எம்.எஸ்.எம். றூமி தலைமையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை கேட்போர் கூட அரங்கில் நிகழ்வு இடம்பெற்றது.
அங்கு இந்த சனசமூக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேற்றைய விதைகள் இன்றைய அறுவடை சிறப்பு நினைவு மலர், பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்;கிய “உயர்வு” அரையாண்டு சஞ்சிகை வெளியீடு, சனசமூக நிலையத்திற்கான இணையத்தளம், கொடி, கீதம் அறிமுகம், சமூகப் பணியாற்றியோருக்கான கௌரவிப்பு, சனசமூக வாசிப்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு, சனசமூக நிலையத்துடன் இணைந்து பல்வேறு வகையான சமூகப் பணியாற்றிய உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் விமர்சையாக இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எப். றிப்கா, ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நழீம் உள்ளிட்ட இன்னும் அநேக அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும் பதில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளருமான அஸ்மி, ஒப்பந்த வேலைகளுக்கு மட்டும்தான் சனசமூக நிலையங்கள் லாயக்கானது என்ற பார்வையை நீக்கி, சன சமூக நிலையங்கள் மாணவர்களையும் இளையோரையும் ஈடுபடுத்தி கல்விப்புரட்சியைச் செய்யவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடிப்படை மேலதிக தொழினுட்பக் கல்வி அறிவு, வேலைவாய்ப்புக்களுக்கான வசதிகள் உள்ளிட்ட சமூகத்தின் எல்லாத் தேவைகளையும் கவனிக்கின்ற ஒரு அமைப்பாக ஏறாவூர் 3ஏ சன சமூக நிலையம் செயற்பட்டு வருவது சிறந்த முன்னுதாரணமாகும்.
இந்த அமைப்பு ஏறாவூருக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் சிறந்ததொரு முன்மாதிரியாக இருக்கும்.” என்றார்.
No comments: