News Just In

7/12/2021 08:17:00 PM

சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டம் சம்மாந்துறையில் ஆரம்பம்!!


சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்)
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் நேற்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனஜீவராசிகள் பாதுகாப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஷ, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.ஜே.லத்தீப், சம்மாந்துறை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் , கணக்காளர் ஐ.எம். பாரிஸ், மற்றும் உற்பத்தியாளர்கள் என குறிப்பிட்ட அளவானோர் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் பங்களிப்பாக சுமார் 7 மில்லியன் ரூபா நிதி மற்றும் உற்பத்தியாளர்களின் பங்களிப்பாக சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஆக மொத்தம் 12 மில்லியன் ரூபா பெறுமதியானதும் 110 பயனாளிகளை கொண்டதுமான கைத்தறி மற்றும் தையல் உற்பத்திச் செயற்பாடுகளை உள்ளடக்கிய இந்த உற்பத்திக் கிராம செயற்திட்டமானது அதன் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு மிகவும் கோலாகலமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுய தொழில் முயற்சியாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் குறைகளை அதிதிகள் செவிமடுத்ததுடன் அவற்றை எவ்வாறு எதிர்காலத்தில் நிவர்த்திப்பது மற்றும் குறைகளை நிவர்த்திப்பதற்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக பிரதம அதிதிகளான அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதன்போது பிரதேசத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் தையல் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவற்றினை அதிதிகள் பார்வையிடிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments: