கடந்த நான்கு நூற்றாண்டுகளில் வடபகுதி முஸ்லிம்கள்மூன்று முறை வேரறுத்து விரட்டப்பட்டிருக்கிறார்கள்.
இதற்குத் தமிழ் மக்கள் பொறுப்புக் கூற வேண்டும்.
தமிழ்ப் புத்திஜீவிகள் அறைகூவல்
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில் சிறுபான்மையினருக்கான கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கையின் வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களின் 35வது வருட அகதி வாழ்வையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது.
வடபகுதி முஸ்லிம்களின் முந்தைய வாழ்வியல் அம்சங்களை நிரூபணமாக்கும் புகைப்படக் கண்காட்சி, இனியும் வேண்டாம் இடம்பெயர்வுகள் சுவரோவியம், ஆவணத்திரைப்படம் உள்ளிட்ட காட்சிகளும் வடக்கு மாகாணத்தில் தமிழ்–முஸ்லிம் உறவுமுறை, இடம்பெயர்வினால் மனித சமுதாயத்திற்கு ஏற்படும் தாக்கம், வடக்கு மாகாணத்தில் தமிழ்–முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையையும் உறவையும் கட்டியெழுப்புதல், யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் அனுபவங்களும் எதிர்காலப் பார்வையும், யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்களாகிய நாங்கள் துணையாக இருத்தல், வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் பெண்கள் உரிமை சார்ந்த விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படும் விதம் உள்ளிட்ட கருப்பொருள்களில் பேச்சுக்களும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளில் ஆர்வலரான இளங்கோவன், அரசியல் திறனாய்வாளரும்;, பத்திரிகையாளருமான எம். நிலாந்தன், செயற்பாட்டாளர் ஐ. ஆயிஷா பானு, யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் என். எம். அப்துல்லாஹ், சமூக செயற்பாட்டாளரும் உடனடி மனிதாபிமான புனர் நிர்மாண செயலகத்தின் முன்னாள் பணிப்பாளருமான
செல்வின் இக்னேஷியஸ், நிபுணத்துவ ஆலோசகரும் வளவாளருமான ஏ. சொர்ணலிங்கம், பெண் உரிமைச் செயற்பாட்டாளர்களான ரஜனி ராஜேஸ்வரி, ஷகீதா பாலச்சந்திரன், மன்னார் பெண்கள் செயல்பாட்டு வலையமைப்பின் ஸ்தாபகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஷிரீன் ஷரூர், யாழ்ப்பாணம் மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி.ஏ.எஸ். சுபியான் ஆகியோருட்பட இன்னும் பல அதிதிகள் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
இலங்கையின் மூத்த முற்போக்கு அரசியல்வாதியும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகருமான தந்தை செல்வாவின் பேரனும் தந்தை செல்வா நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலருமான எஸ்.சி.சி. இளங்கோவன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் தமிழ்–முஸ்லிம் இனங்களுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் உறவைக் கட்டியெழுப்புதல் எனும் பேசுபொருளில் அரசியல் திறனாய்வாளர், பத்திரிகையாளர் எம். நிலாந்தன் உரையாற்றினர்.
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்; இருந்து கடந்த 4 நூற்றாண்டுகளுக்குள் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் 3 முறை தங்கள் வாழ்விடங்களிலிருந்து வேரை அறுத்துக் கொண்டு போகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு விரட்டப்பட்டிருக்கிறார்கள். முதலாவது சந்தர்ப்பம் போர்த்துக் கீசரின் காலத்தில் 1614ஆம் ஆண்டில் நடந்தது.
போர்த்துக் கீசியர்கள் முஸ்லிம்கள் வாழ்ந்த இடத்திலே வெற்றி மாதா தேவாலயத்தை ஸ்தாபிப்பதற்காக முதன் முதலாக முஸ்லிம்களை அந்த இடத்திலிருந்து அகற்றினார்கள். அந்த வெற்றிமாதா தேவாலயம் பின்னர் புதுமை மாதா தேவாலயம் என்று அழைக்கப்பட்டது.
முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றிய இரண்டாவது சம்பவம் நல்லூரில் இடம்பெற்றது. நல்லூரில் வாழ்ந்த முஸ்லிம்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு ஹிந்துக்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் மறுத்து விட்டார்கள். அதனால் முஸ்லிம்களது காணிகளை விலைக்கு வாங்க ஹிந்துக்கள் முயற்சித்தார்கள். அதற்கும் முஸ்லிம்கள் உடன்படவில்லை.
அதனால் வேறொரு தந்திரத்தைப் பாவித்து முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்து முஸ்லிம்கின் வீடுகளிலுள்ள கிணறுகளில் ஹிந்துக்கள் பன்றி மாமிசத்தைப் போட்டார்கள். அதனால் முஸ்லிம்கள் வேறு வழியின்றி நல்லூரிலிருந்து வெளியேறி நாவாந்துறைக்கு அப்பால் சென்றதாக யாழ்ப்பாண வைபவ மாலை எனும் நூலின் 91ஆம் பக்கத்தில் விவரங்கள்; குறிப்பிடப்பட்டுள்ளன.
மூன்றாவதாக ஈழப்போராட்டத்தில் 1990ஆம் ஆண்டு ஒக்ரோபெர் மாதம் முஸ்லிம்கள் அனைவரும் வடக்கு மாகாணத்திலிருந்து அகற்றப்பட்டார்கள்.
இந்த மூன்று விடயங்களும் நான்கு நூற்றாண்டு காலப்பகுதிக்குள் நடந்தேறியிருக்கின்றன.
போர்த்தக் கீசர் முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து அகற்றிய சம்பவத்திற்கு தமிழர்களின் பங்களிப்பு பெரிதளவில் இருக்கவில்லை என்கின்ற போதிலும் அதன் பின்னர் நடந்த இரண்டு சம்பவங்களிலும் முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வேரறுத்து அகற்றியதற்குத் தமிழ் மக்கள் பொறுப்பாவார்கள்.
இப்படிப் பார்த்தால் கடந்த நான்கு நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வேரை அறுத்துக் கொண்டு வெளியேறுமாறு திட்டமிடப்பட்டு விரட்டப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே, முஸ்லிம்களுக்கு நடந்த துயரத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாங்கள் இருக்கின்றோம்.
தமிழ் மக்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சிறிலங்கா அரசிடமும் அனைத்துலக சமூகத்திடமும் பொறுப்புக் கூறுமாறு கேட்கின்றார்கள். அப்படியென்றால், எங்களோடு வாழ்ந்த சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்திற்கு எங்களால் இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய மக்களாக நாங்கள் இருக்கின்றோம். பொறுப்புக் கூறித்தான் ஆகவேண்டும்.
இப்பொழுது நடக்கும் சம்பவங்களுக்கு மட்டுமல்ல கடந்த நான்கு நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லிம் சமூகத்திற்கு எங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நாங்கள் பொறுப்புக் கூறித்தான் ஆக வேண்டும்.
அதனைச் பொறுப்புடன் செய்தால்தான் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பலாம்.” என்றார்
No comments: