News Just In

5/26/2021 08:14:00 AM

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற மரணங்களை கிண்ணியா-மஹமாறு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணியகம் அனுமதி!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மரணிக்கின்ற மரணங்களை கிண்ணியா-மஹமாறு கிராமத்தில் நல்லடக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணியகம் அனுமதி வழங்கியுள்ளதாக திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (25) இந்த அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை இதுவரைக்கும் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இருந்த போதிலும் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்ஷன் பாண்டிகோரல அவர்களின் ஆலோசனையின் பேரில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கனி ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தலைமையிலான குழுவினர் சென்று குறித்த இடத்தை ஏற்கனவே பார்வையிட்டனர்.

இதனையடுத்து அந்த இடத்தின் அறிக்கைகளை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் மத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் இன்று(25) முதல் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை கிண்ணியா பிரதேசத்தில் உள்ள மஹமாறு கிராமத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.




No comments: