News Just In

5/10/2021 09:42:00 AM

கல்முனை பொலிஸ் பிரிவில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது; மேலும் 590 க்கும் அதிகமான போதை மாத்திரைகள் பறிமுதல்!!


பழைய இரும்பு விற்கும் போர்வையில் பட்டா வாகனம் ஒன்றில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 590 க்கும் அதிகமான போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்முனை மாநகர பிரதான வீதியில் நேற்று (09) மாலை சந்தேக நபர் பட்டா வாகனம் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடுவதாக மாவட்ட புலனாய்வு பிரிவு மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற கல்முனை பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பகுதியில் இருந்து குறித்த போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைதானவர் சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இரும்பு சேகரித்து விற்பனை செய்பவர் எனவும் சந்தேகநபர் அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதை அடங்கிய மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட 590 போதை மாத்திரைகள், ஹெரோயின், சந்தேக நபர் மற்றும் போதை மாத்திரைகளை கடத்த பயன்படுத்திய பட்டா ரக வாகனம் என்பனவற்றை கல்முனை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments: