மட்டக்களப்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்புக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு மிகவும் விசேட தேவையாக இருந்தது எமது கட்சி உறுப்பினர்களின் பிரதேசங்களுக்கு வந்து உறுப்பினர்களின் பிரச்சினைகள் என்னவென்று அறிந்து அவர்களுக்கூடாகவே அதனைத் தீர்த்து வைப்பதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது. தற்போது நாம் கட்சியின் தேசிய வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்தியுள்ளோம். அத்திட்டத்தை எமது உறுப்பினர்களின் ஆலோசனைகளுக்கமையவே அமுல்ப்படுத்தவுள்ளோம். அதனூடாகவே எமது கட்சியை மிகவும் சக்தியுள்ள கட்சியாகப் பரிநமிக்க முடியும்.
கடந்த காலங்களில் நாம் இந்தப் பிரதேசங்களில் அரசியலில் ஈடுபடுகின்ற போது எம்முடன் இணைந்திருந்த ஏனைய கட்சிகளுக்குத் தான் இடம்கொடுத்தோம். அதே போன்று எமது ஆட்சிக் காலத்தில் அதன் பலன்களையும் ஏனைய கட்சியின் பிரமுகர்களுக்கே அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வழங்கினோம். அதனூடாக எமது கட்சியின் உறுப்பினர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் மீள இடம்பெறாது. எமது செயற்பாடுகளில் எமது உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்தே செயற்படுவோம்.
எமது கட்சியின் தலைமைத்துவம் என்ற ரீதியில் எமக்கு ஒரு பொறுப்புள்ளது. எமது கட்சியைப் பாதுகாப்பவர்கள் எமது உறுப்பினர்களென்றால் அவர்களை நாம் முதலில் பாதுகாக்க வேண்டும். முன்னர் போன்று இல்லாமல் எமது கட்சிக்குள்ளே புதிய படிமுறையொன்றை நாம் எடுத்துள்ளோம். கடந்த காலத்தில் எமது கட்சி உறுப்பினர்களுக்கு பல அநியாயங்கள் இடம்பெற்றுள்ளது. அதற்கு முதற்கண் மன்னிப்புக் கோருவதுடன் எதிர்காலத்தில் அவ்வாறான அநியாயங்கள் நிகழா வண்ணம் செயற்படுவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் எமது கட்சியை முன்நோக்கி எடுத்துச் செல்வோம்.
இந்த நாட்டின் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடிய ஒரே ஒரு கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே. இக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க அவர்களின் திடசங்கல்பமாக இருந்தது அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே. அந்த நோக்கத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். நாடு என்ற ரீதியில் நாங்கள் ஒன்றுபடாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை.
இன்று இந்த அரசாங்கம் பலவீனமடைந்து இருக்கின்றது. இன்று இந்த நாடு இனங்களுக்கிடையில் பிளவுபட்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களுக்கு வாழ்வதற்குச் சிரமம். கல்வி வீழ்ச்சியடைந்துள்ளது. பாடசாலைகளைக் கூட சரியான முறையில் முன்னேற்ற இந்த அரசால் முடியாதிருக்கின்றது. அதே போன்று இந்த நாட்டின் சொத்துக்களையும் இந்த அரசாங்கம் அழித்து வருகின்றது. நாட்டின் காடுகளை அழித்து வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்றுக் கொண்டிருக்கின்றது. சுற்றுலா மற்றும் சுற்றுலா வியாபாரம் என்பன வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறிருக்கையில் எவ்வாறு இந்த நாட்டில் எமது குழந்தைகளுக்கு ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது.
எனவே மக்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளார்கள் இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் கண்டிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அமைய வேண்டும் என்று. ஏனெனில் அதற்கான திறனும், அனுபவமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உண்டு. நாங்கள் கட்சி என்ற ரீதியில் எழுந்திட தற்போது நேரம் வந்துள்ளது.
அனைவருக்கும் தெரியும் எமது கட்சியில் இருந்து குழுவொன்று வெளியேறி வேறொரு கட்சியினை ஆரம்பித்துள்ளனர். எங்களில் இருந்து விலகிச் சென்றவர்களையும் நாங்கள் மீள இணைத்து மீண்டும் சக்தியுடன் நாங்கள் எழுந்திட வேண்டும். என்ன நடந்தாலும் இந்தக் கட்சியின் யானை, கட்சியின் பச்சை நிறத்தை நாம் ஒருபோதும் மாற்றுவதற்கு இடமளியோம்.
எங்களுக்கு பாராளுமன்றம் செல்ல வேண்டுமாக இருந்தால் நாங்கள் சஜித் பிரேமதாசவுடன் சென்றிருக்கவும் முடியும், மறுபக்கம் அமைச்சுகளைப் பெற வேண்டுமாக இருந்தால் மிக இலகுவாக அரசுடன் இணைந்திருக்கவும் முடியும். அப்படியிருந்தும் நாங்கள் இந்தக் கட்சியில் இருப்பதற்கான காரணம் நாங்கள் இந்தக் கட்சியை நேசிப்பதாலேயே. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இவ்வாறான பிரச்சினைகள் இருந்தும், எமது தோல்வியை உணர்ந்தும் நாங்கள் இந்தக் கட்சியுடனேயே இருந்தோம் என்றால் இது கட்சியின் மீது கொண்ட அளவற்ற பற்றுதலாலேயே. எனவே இந்தக் கட்சியை மீளக்கட்டியெழுப்புவதற்கு நூற்றுக்கு நூறு வீதம் எங்கள் அர்ப்பணிப்பு இருக்கும். 2025ல் எமது ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் வகையில் எமது கட்சியை நாம் மீளக் கட்டியெழுப்புவோம்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும், எமது கட்சியைப் பலப்படுத்தவுமே நாங்கள் இவ்விடம் வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் எமது கட்சி தொடர்பான தீர்மானங்கள் அந்த அந்த பிரதேசத்தவர்களின் கலந்துரையாடல் மூலமே எடுக்கப்படும். நாங்கள் கொழும்பில் இருந்து கொண்டு ஏனைய பிரதேசம் தொடர்பில் தீர்மானிக்க முடியாது என்று தெரிவித்தார்.

No comments: