News Just In

12/04/2020 03:13:00 PM

இத்தாலியில் உள்ள சுமார் ஐயாயிரம் இலங்கையர்கள், நாடு திரும்புவதற்காக, தம்மை பதிவு செய்துள்ளனர்..!!


எனினும், தமக்கு இதுவரை நாடு திரும்புவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெறவில்லை என சில தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், பதிவு செய்துள்ள நபர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை, சற்று பிற்போடப்பட்டுள்ளதாக, இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவர் சிசிர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், பதிவு செய்யப்பட்ட வரிசையின் அடிப்படையில், அவர்களுக்கு நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிவிவகார அமைச்சு மற்றும் கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் அனுமதியுடன், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பதில் தூதுவர் சிசிர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டுக்கு அழைத்துவரும் சந்தர்ப்பத்தில், இலங்கையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகளை கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பிரான்ஸிருந்து நாட்டுக்கு அழைத்துவருவதற்கு தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, சில தரப்பினர் சமூக வலைத்தளங்களில் செய்திகளை வெளியிடுவதாகவும், அவ்வாறான நபர்களை நம்ப வேண்டாம் எனவும், பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments: