News Just In

2/27/2020 09:59:00 AM

இலங்கை ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகிய முடிவுக்கு உலக நாடுகள் கடும் அதிருப்தி!


பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகுவதான அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு பிரித்தானியா மற்றும் கனடா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கான இணை அனுசரணையில் இருந்து இலங்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தமை தமக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக வெளிவிகார மற்றும் கொமன்வெல்த் அலுவலக அமைச்சர் லோர்ட் தாரிக் அகமட் தெரிவித்தார்.

மேலும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும்இ நல்லிணக்கம் , நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும் அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இதேவேளை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கான அணுகுமுறையை மாற்ற இலங்கை எடுத்த முடிவால் கனடா ஏமாற்றமடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மேலும் நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு அழைப்பு விடுத்ததுடன் , இலங்கைக்கு ஆதரவளிக்க தாம் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்திலிருந்து அரசாங்கம் நேற்று , முன்னர் வழங்கிய இணை அனுசரணையை முறையாக வாபஸ் பெற்றதுடன் , உள்நாட்டு செயன்முறை மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: