News Just In

1/22/2020 10:53:00 PM

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டிப் பொங்கலுடன் தொடர்புபட்ட உள்ளூர் பண்பாட்டு விழா

பங்குகொள் செயல்மைய ஆற்றுகை ஆய்வுப் பணிகளில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுவரும் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினரால் பட்டிப்பொங்கல் திருவிழா பண்பாட்டு விழாவாகவும் அறிவியல் ஆய்வு விழாவாகவும் வடிவமைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், பாரம்பரிய பண்பாட்டு கலையம்சங்களின் அம்சமான பட்டிப்பொங்கலுடன் தொடர்புபட்ட உள்ளூர் பண்பாட்டு விழா திங்கட்கிழமை (20.01.2020) காலை 10.00 மணி அளவில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை முன்றலில் நுண்கலைத்துறையின் தலைவர் திரு சு.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பதில் பீடாதிபதி எஸ்.ஜெகநாதன், நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.யெஜசங்கர், நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வ.இன்பமோகன்,

தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரம், உதவி நிதியாளர் திரு. எஸ்.ரட்ணராஜ், சமூக விஞ்ஞானத்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. கலாநிதி ஜி.தில்லைநாதன், தமிழ்த்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.நதிரா ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்விலே 'பட்டி மேய்ப்பும் மருத்துவமும்' என்னும் தொனிப்பொருளில் உள்ளூர் மாட்டு மருத்துவர் குழந்தைவேல் கணபதிப்பிள்ளை அவர்கள் கருத்துப் பகிர்ந்தார். இதில் விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்குகொண்டு கலந்துரையாடினர். 

இக் கலந்துரையாடலானது பல்கலைக்கழக ரீதியில் உள்ளூர் அறிவு ரீதியான திறன்கள் கடத்தப்படுவதற்கும், ஆய்வினை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்தது.

இந்நிகழ்வானது இன்றைய உலகமயமாக்கல் வெளியில் பண்பாட்டு நடைமுறையின் வாழ்வியல் கூறுகளின் கலை அடையாளங்கள் மறைக்கப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் இதனை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் செயற்படுத்தி வலுப்படுத்துவதும், பாடத்திட்டத்திற்கும் அமைவாக மாணவர்களை ஈடுபடுத்துவதும் தேவையானது எனக் கருதி இப்பட்டிப் பொங்கலுடன் தொடர்புபட்ட கலை பண்பாட்டுவிழா நடாத்தப்பட்டது.

காலனிய சிந்தனைகளுக்குள் அமிழ்ந்துபோய் இருக்கும் சமூகத்திற்கு இவ்வாறான நிகழ்வுகள் தமது பழமையையும் பாரம்பரியம் பற்றிய மதிப்பீட்டுப்பார்வையும் அதன் இருப்பு, தேவை, முக்கியத்துவத்தினைப் புரிந்து செயற்படுவதற்குரிய வாய்ப்பாகவும் இப்பட்டிப்பொங்கலுடன் தொடர்புபட்ட கலை பண்பாட்டுவிழா காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.

No comments: