News Just In

1/21/2020 06:26:00 PM

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் சம்பவம்-புலஸ்தினியின் மரபணு பொருந்தவில்லை!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுக்கள், அவரின் குடும்ப உறவுகளின் மரபணுவுடன் பொருந்தவில்லை என்று விசேட குற்றவியல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசாரணையின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை இரண்டு கட்டமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 6 சந்தேக நபர்களுக்கான விசாரணையின்போது மன்றில் தோன்றிய விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் மரபணு பரிசோதனை தொடர்பாக நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

விசேடமாக, இந்த தாக்குதலின்போது மரணமடைந்ததாக தெரிவிக்கப்படும் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்ற பெண்ணின் மரபணு பரிசோதனை மாத்திரம் எந்தவொரு மரபணு பரிசோதனையுடனும் ஒத்துப்போகவில்லை என்று அவர் மன்றில் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராந்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டார்

மேலும், சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் மரபணு பரிசோதனையை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி மீண்டும் மன்றில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

No comments: