News Just In

1/21/2020 06:39:00 PM

காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம்


மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தினை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.முன்பாக காலை ஆரம்பமாகிய பேரணி, மட்டக்களப்பு நகர் ஊடாக சென்று மட்டக்களப்பு மத்திய வீதியில் திறக்கப்பட்டுள்ள காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை சென்றடைந்தது. அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு கண்துடைப்பாகவே இந்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

யாருக்கும் அறிவிக்கப்படாமல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்திற்கு அறிவிக்கப்படாமல், ஊடகங்களுக்கு அறிவிக்கப்படாமல் குறித்த அலுவலகம் இரகசியமான முறையில் திறக்கப்பட்டுள்ளமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டினர்.

‘6000 ருபாய் கொடுத்து மக்களை ஏமாற்றாதே’, ‘எங்களுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும் உள்ளூர் விசாரணை அல்ல’, ‘இரவோடிரவாக ஓ.எம்.பி.யை அமைத்து இலங்கை அரசு எதனை சாதிக்கப்போகின்றது’, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.



No comments: