News Just In

11/03/2026 09:38:00 PM

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டுத் தரக் கோரி கவன ஈர்ப்புபட் போராட்டம் மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டுத் தரக் கோரி கவன ஈர்ப்புபட் போராட்டம் மாவட்டச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்ளடங்கும் பாரம்பரியமான மேய்ச்சல் தரை மயிலத்தமடு மற்றும் மாதவனை பிரதேசங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத் தருமாறும், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

முன்னதாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி திங்களன்று (02) மாலை மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை தந்த கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள், தமிழரசுக் கட்சியின் முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சரான அலிஸாஹிர் மௌலானா உட்பட பொதுமக்களும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

“எங்களது பாரம்பரிய வாழ்வாதார நிலமான மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரையை உடனடியாக மீட்டுத் தாருங்கள்", கால்நடை வளர்ப்பை அழிக்கும் சதிக்கு முற்றுப்புள்ளி வை" போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாகத் திரண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பால் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பைச் செய்யும் மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகள், தலைமுறை தலைமுறையாக அப்பகுதி பண்ணையாளர்களால் மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் குரலெழுப்பினர்.

குறிப்பிட்ட மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசங்கள் கடந்த சில ஆண்டுகளாக் வெளிமாவட்டங்களிலிருந்து வந்து ஆக்கிரமித்து பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் கால்நடைகளுக்குப் போதிய தீவனம் கிடைக்காமலும், ஆக்கிரமிப்பாளர்களால் கால்நடைகள் சுடப்பட்டும், வெட்டப்பட்டும், கொல்லப்படுவதாகப் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜை நேரில் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.

மகஜரைப் பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர்;, இப்பிரச்சினையின் தீவிரத்தன்மையைக் கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

No comments: