அம்பாறை மாவட்டம், நிந்தவூரில் போதைப்பொருளற்ற ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பது அவசியம் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம் தெரிவித்தார்.
ஐக்கிய நண்பர்கள் வட்டம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “Drug Free League 2026 – உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்" இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், விளையாட்டின் ஊடாக ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வு மக் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் கௌரவ அதிதிகளாக நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தலைமைப் பொலிஸ் பரிசோதகருமான ஏ.டவலியு.எஸ். நிஷாந்த வெடகே, டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.ஸனா ஜமால்தீன் மற்றும் அவ்வைத்தியசாலையின் நலன்புரி ஒருங்கிணைப்பாளர் அஜ்வர்ட் சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான கே.மொஹமட் ஜலீல், எம்.ஜெ.எம்.ஜுஸைல் ஆகியோரும், விசேட அதிதிகளாகப் பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகப் பணிப்பாளர்கள், மருத்துவத்துறையினர் மற்றும் சமூகப் பங்களிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தவிசாளர், இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பாரிய சமூகச் சவால்களில் ஒன்றாக போதைப்பொருள் பாவனை காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இதனைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானதல்ல என்றும், இளைஞர்களை விளையாட்டு, கலை, கலாசாரம் உள்ளிட்ட ஆக்கபூர்வமான சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களைத் தவறான வழிகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், கிரிக்கெட் விளையாட்டின் ஊடாக இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லுறவு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் ஐக்கிய நண்பர்கள் வட்டம் அமைப்பு முன்னெடுத்துள்ள இம்முயற்சி பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார்.
இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், அவர்களை ஆரோக்கியமான சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கும் இவ்வாறான விளையாட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய ஐக்கிய நண்பர்கள் வட்டம் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், ஏற்பாட்டாளர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கும் இதன்போது பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

No comments: