News Just In

11/23/2026 08:49:00 PM

மிளகாய் இறக்குமதி செய்வோருக்கு எச்சரிக்கை மிளகாய் இறக்குமதி செய்வோருக்கு எச்சரிக்கை

மிளகாய் இறக்குமதி செய்வோருக்கு எச்சரிக்கை

மிளகாய் இறக்குமதியாளர்கள் உரிய தரக்கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் என வலியுறுத்தியுள்ள வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி முறையற்ற இலாபம் ஈட்ட முற்பட வேண்டாம் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

நேற்று (22) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டிற்குள் கொண்டுவரப்படும் மிளகாய் உரிய தரத்திற்கு அமைவாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இறக்குமதியாளர்களுக்கு உள்ளது எனச் சுட்டிக்காட்டிய அவர், சரியான தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மிளகாய் இறக்குமதி செய்வதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்தார்.

"எல் நினோ (El Niño) வானிலை மாற்றம் மற்றும் ஏனைய காரணங்களால் குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மிளகாய், சாதாரண கொள்கலன்களில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டமையினாலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம்" என அவர் விளக்கமளித்தார்.

இலங்கை வழமையாக 250 முதல் 350 கொள்கலன்கள் வரையிலான மிளகாயை இறக்குமதி செய்வதாகவும், கடந்த காலங்களில் இவ்வாறானதொரு சம்பவம் ஒருபோதும் பதிவானதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒக்டோபர் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 14 கொள்கலன்கள் மற்றும் நவம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்ட மேலும் 52 கொள்கலன்கள் தொடர்பிலேயே இவ்வாறு கரிசனைகள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நுகர்வோரைப் பாதிக்கும் வகையில் குறுகிய கால இலாபங்களைத் தேடுவதை விடுத்து, அனைத்து மிளகாய்த் தொகுதிகளும் உரிய தரத்தில் இருப்பதை இறக்குமதியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் சமரசிங்க, "சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி முறையற்ற இலாபம் அடைய முயற்சிக்க வேண்டாம்" எனவும் எச்சரித்தார்.

No comments: