
தெற்கு காஸாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், மருத்துவர் ரிஸ்க் அபு ஷுவைரா உள்பட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 27 பேர் படுகாயமடைந்தனர் என்று காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை இந்தத் தாக்குதல் வெளிப்படையாக மீறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சகம், மருத்துவமனைகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் பலிகளை உறுதிப்படுத்தியமையுடன், மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காஸாவில் சுகாதார சேவைகள் மீது மீண்டும் ஒரு கொடிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காஸாவில் போரினால் பெரும்பாலான மருத்துவமனைகள் முடங்கியுள்ள சூழலில், எஞ்சியிருக்கும் மிக முக்கியச் சிகிச்சை மையங்களில் ஒன்றாக விளங்கும் நாசா் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பிரிவு மீது அதிகாலை தாக்கப்பட்டதில், மருத்துவர் ரிஸ்க் அபு ஷுவைரா உள்பட, நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் என ஆறு பேர் பலியாகியுள்ளனர். மேலும் குறைந்தது 27 பேர் பலத்தகாயமடைந்துள்ளனர். அறுவை சிகிச்சை பிரிவு பெரும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று டெட்ரோஸ் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறைகள், நோயாளிகள் குணமடையும் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிற பகுதிகளும், கட்டடத்தின் 2 ஆவது தளம் பலத்த சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சேதத்தின் முழு அளவை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
No comments: